‘என் பொண்டாட்டிதான் எனக்கு எல்லாம்’.. பழைய சைக்கிளில் ‘கும்பகோணம் TO புதுச்சேரி’.. மனைவிக்காக முதியவர் எடுத்த முடிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை சிகிச்சைக்காக 130 கிமீ சைக்கிளில் அழைத்து வந்த கணரின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
![Oldman travelled by bicycle from Kumbakonam to Puducherry for ill wife Oldman travelled by bicycle from Kumbakonam to Puducherry for ill wife](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/oldman-travelled-by-bicycle-from-kumbakonam-to-puducherry-for-ill-wife.jpg)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (65). இவரது மனைவி மஞ்சுளா (60). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு மேல்சிகிச்சை அளிக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அறிவழகன் முழித்துள்ளார்.
ஊரடங்கு முடிந்த பின் செல்லலாம் என்றால் மனைவியின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே சென்றுள்ளது. இதனால் மனைவியை எப்படியாவது காப்பற்றிவிட வேண்டும் என அறிவழகன் எண்ணியுள்ளார். அதனால் தன்னிடம் இருந்த பழைய சைக்கிள் ஒன்றில் மனைவியை புதுச்சேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என முடிவெடுத்துள்ளார்.
கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு எத்தனை கிலோமீட்டர்?, எவ்வளவு நேரம் ஆகும்?, நம்மால் அவ்வளது தூரம் சைக்கிளில் செல்ல முடியுமா? செல்லும் வழியில் போலீசார் இருப்பார்கள் என எதைப்பற்றியும் முதியவர் யோசிக்கவில்லை. அவர் சிந்தனை அனைத்தும் மனைவியை எப்படியாவது காப்பற்றிவிட வேண்டும் என்பது மட்டும்தான்.
தோளில் ஒரு துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு மனைவியை சைக்கிளில் அமர வைத்து மாயவரம், சீர்காழி, சிதம்பரம், கடலூர் என சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தை இரவு முழுவதும் கடந்து விடியற்காலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளார். இதனை அடுத்து மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்க சென்றுள்ளார். அப்போது கொரோனா தொற்று காரணமாக வெளிப்புற சிகிச்சை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு அவரச சிகிச்சை பிரிவு மட்டும் செயல்பட்டு கொண்டிருந்துள்ளது.
அப்போது முதியவர் தனது மனைவியை சைக்கிளில் வைத்து இவ்வளவு தூரம் கொண்டு வந்ததைக் கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனே மஞ்சுளாவை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். இதனை அடுத்து இருவரையும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கவைத்து அவர்களுக்கு தங்களது செலவிலேயே உணவுகள், மருந்துகள் போன்றவற்றை மருத்துவர்கள் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
சிகிச்சைக்கு பின்னர் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் இலவசமாக கும்பகோணம் அனுப்பி வைத்துள்ளனர். சைக்கிளில் வந்தது குறித்து தெரிவித்த அறிவழகன், ‘என் பொண்டாட்டிதான் சார் எனக்கு எல்லாம். அவ இல்லன்னா நான் இல்ல’ என கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
News Credits: Vikatan
![](https://www.behindwoods.com/images/spacer.gif)