‘நிவர் புயல் சென்னையை தாக்குமா தாக்காதா?’.. இல்ல.. போற போக்குல ஒரு காட்டு காட்டுமா? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‘அதிரடி’ பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் சென்னைக்கு அருகே 450 கி.மீ தூரத்தில் இருந்து மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என்றும் அவ்வாறு கடக்கும்போது மணிக்கு 100 கி.மீ வேகத்தில், காற்றுவீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன்கூடிய கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் கரையைக் கடக்கும் நிவர் புயல் சென்னையைத் தாக்குமா? என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதன்படி, “அதிதீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிவர் புயலால் 3 நாள்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாள்களுக்குக் கனமழையும்; திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுவையில் பலத்த மழையும்; திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுவையில் மிக பலத்த மழையும் பெய்யும். கடலோர மாவட்டங்களில் 100 முதல் 120 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “புயலின் அளவு மிகவும் பெரியது என்பதுடன் புயலுக்கு கண் பகுதி, வால் பகுதி என்றெல்லாம் இருக்கின்றன. சென்னைக்கும் புதுச்சேரிக்கும் பயணிக்கு நமக்கு வேண்டுமானால் 3 மணி நேரம் ஆகலாம். ஆனால், புயல் அப்படி அல்ல. வேகமாக கடந்துவிடும். அதற்கு அதெல்லாம் ஒரு தூரமே அல்ல. அதனால் நிவர் புயல் சென்னையை நேரடியாகப் பலமாகத் தாக்கும் வாய்ப்பு இல்லை என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சற்று குறைந்த அளவான தாக்கம் கடலோரப் பகுதிகளில் இருக்கவே செய்யும். எனவே, முன்னெச்சரிக்கை அனைவருக்கும் அவசியம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.