சென்னையில் கனமழை...! '14 ஏரிகள் நிரம்பி அடையாறில் வெள்ளம்...' - 'இந்த' பகுதிகள்ல மட்டும் வெள்ள நீர் புகும் அபாயம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தொடர் மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.

சென்னையை அடுத்து காட்டாங்குளத்தூர், செந்தமிழ் நகரில் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. காவனூர் ஏரி அருகே இருக்கும் தாழ்வான அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதியான இரையூர், செம்பாக்கம்,நத்தப்பேட்டை, வையூர்,புக்காத்துறை, கொளப்பாக்கம், தாத்தனூர், குண்டுபெரம்பேடு,அரனேரி, நன்மங்கலம், புலிக்கொரடு, எம்.என்.குப்பம், பட்டறைகழனி, வையூர் புல்லிட்டின் தாங்கல் ஆகிய 14 ஏரிகளும் தொடர் மழையால் நிரம்பி உள்ளன.
சென்னை நகரின் ஊடாக ஓடும் அடையாறில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், ஆற்றங்கரையோரத்தில் இருப்போர் பாதுகாப்பாக இருக்குமென அதிகாரிகள் கூறியுள்ளனர். அடையாறு கரையோரம் உள்ள வரதராஜபுரம், லக்ஷ்மி நகர், முடிச்சூர், பி டி சி கோட்ரஸ், மணிமங்கலம் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் முடிச்சூர் அருகே அடையாற்றில் ஆகாய தாமரை படர்ந்து கிடப்பதால் நீரோட்டம் தடைபட்டு, அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் செல்லும் நிலை உருவானது. இதையடுத்து தாம்பரம் தீயணைப்பு துறையினர் ஆகாயதாமரை செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 6 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் மட்டும் இரண்டாயிரத்து 367 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 498 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
சோழவரம் ஏரியில் மிகக் குறைந்த அளவாக 142 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. பூண்டி ஏரியில் அதன் முழுக்கொள்ளளவில் பாதியளவே தண்ணீர் உள்ளது. கிருஷ்ணா நீர், மழை நீர் என ஏரிக்கு ஆயிரத்து 150 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

மற்ற செய்திகள்
