கடலூர்: ‘278 ஆபத்தான இடங்கள்’.. ‘180 ஜெனரேட்டர்கள்’.. NIVAR புயலை எதிர்கொள்ள ‘முழுவீச்சில் தயாரான மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படை!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயல் முன்னெச்சரிக்கைக்காக தாழ்வான மற்றும் குடிசைப் பகுதிகளில் இருப்பவர்களை மீட்டு முகாம்களில் தங்கவைக்கும் பணிக்கான ஆயத்தங்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று நிவர் புயலாக 25-ம் தேதி மாமல்லபுரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம் என்றும், சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இதனால் பலத்த காற்று சூறாவளி வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதுமான கடலோர கிராமங்களையும், தற்காலிகத் தங்கும் முகாம்களையும் ஆய்வு செய்த கடலூர் ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி,பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர், அத்தியாவசிய பொருள்களை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து விகடன் இதழுக்கு தகவல் அளித்த ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி, “கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்படக் கூடிய மொத்த இடங்கள் 278, அவற்றில் 92 இடங்கள் அதிகமாகப் பாதிப்புகளை சந்திக்கக் கூடியவை, இதனால் இப்பகுதி மக்களை 19 மண்டல அலுவலர்கள் மூலம், 28 புயல் மையங்கள், 14 பல்நோக்கு மையங்கள், 191 தற்காலி தங்குமிடங்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளை அமைத்திருப்பதுடன் தற்காலிகப் பாதுகாப்பு மையங்களில் இட்லி மாவு கூட அரைத்து வைக்கும்படி உத்தரவிட்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாநில பேரிடர் மீட்புப் படையினர் 220 பேர் பல்வேறு பகுதிகளில் தயராக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தவிர தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 6 குழுக்களாக என மொத்தம் 126 வீரர்கள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுள்
3 குழுக்கள் கடலூரிலும், 3 குழுக்கள் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளிலும் நிறுத்தப்பட்டிருக்கின்றனர் என்றும், நிலைமையை சமாளிப்பதற்காக 180 ஜென்செட்டுகள், 180 ஜெனரேட்டர்கள், 180 ஜே.சி.பி இயந்திரங்கள், 1 லட்சம் மணல் முட்டைகள், 100 டிரான்ஸ்பார்மர், மின் இணைப்புக் கம்பிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கபட்டதால், யாரும் கடலுக்குள் செல்லவில்லை என்றும் மீன்வளத் துறை மூலம் 59 ஃபைபர் படகுகள், 18 ரப்பர் படகுகள், 4,500 லைஃப் ஜாக்கெட்ஸ் (பாதுகாப்பு ஆடைகள்) தயாராக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
