'சென்னைக்கு வந்த கண்டெய்னரில் சிங்கமா'?... 'ஹாயாக உலாவும் புகைப்படங்கள்'... உண்மை என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குள் வெளிநாட்டு கண்டெய்னர் வழியாக சிங்கம் வந்துவிட்டதாக, வாட்ஸ் ஆப் வாயிலாக பரவும் செய்தியில் உண்மை இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இந்த செய்தி எவ்வாறு பரவியது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி குறிப்பு.
சென்னை எண்ணூர் அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குள் பெண் சிங்கம் ஒன்று குட்டிகளுடன் நடமாடுவதாகவும், அங்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறி வாட்ஸ் ஆப் வாயிலாக புகைப்படங்களுடன் செய்தி ஒன்று பரவியது. வாட்ஸ் ஆப்பில் இந்த தகவலை பரப்பியவர் தனது பெயர் மற்றும் முகவரி குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
இந்த தகவல் வைரலானதையடுத்து அதுகுறித்து காவல்துறையின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவலை மறுத்த காவல்துறையினர் சமூகவிரோதிகள் தான் இந்த தகவலை வாட்ஸ் ஆப் வாயிலாக பரப்பியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள். இதனிடையே இந்த சம்பவம் குறித்து ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்த புகைப்படங்கள் குஜராத் மாநிலம், பிபாவாவ் (Port Pipavav) துறைமுக பகுதியில் கடந்த வாரம் எடுக்கப்பட்டவை என தெரிவித்துள்ளது.
மேலும் துறைமுகத்தையொட்டிய காட்டுப்பகுதியில் இருந்து அடிக்கடி சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள் இரைதேடி குட்டிகளுடன் அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடந்து நடமாடுவதால் அவற்றின் உயிருக்கு ஆபத்து நேர்வதாக விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் துறைமுகத்தில் சிங்கம் நடமாடும் புகைப்படம் மற்றும் விபத்தில் அடிப்பட்டு ரத்தகாயத்துடன் போராடிய இளைஞரின் புகைபடத்தையும் சேர்த்து ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதை போன்று, சமூகவிரோதிகள் சிலர் வாட்ஸ் ஆப்பில் பொய்யான தகவலை பரப்பியுள்ளார்கள்.
இதனை முழு நேர வேலையாக செய்யும் இவர்கள், இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி, மக்களை எப்போதும் பதற்றமான சூழ்நிலையில் வைத்திருக்க வேன்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும். எனவே இதுபோன்ற தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளார்கள். பொதுமக்களும் இதுபோன்ற தகவல்கள் வந்தால் அதன் உண்மை தன்மையை அறியாமல் அதை ஷேர் செய்யாமல் இருப்பதே நலம்.