'வெளிநாட்டுல மட்டும் இல்ல, இனிமேல் மதுரையிலும் பார்க்கலாம்'...'அசத்தலாக அமையப்போகும் மதுரை விமான நிலைய 'ரன்வே'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல் உலகப்போர் காலகட்டத்தில் 1942-ம் ஆண்டு மதுரையில் விமான நிலையம் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பயணிகள் விமானம் 1956-ம் ஆண்டு சென்னை-மதுரை-திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டது. மாறி வரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப மதுரை விமான நிலையம் மேம்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது. தற்போது 2 டெர்மினல்களுடன், மதுரை விமான நிலையம் 17 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் தமிழகத்தின் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் விமான நிலையமாக உள்ளது.
மாதம் ஒன்றுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் பயணிகள் வருகின்றனர். மதுரையிலிருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத், ராஜமுந்திரி, திருப்பதி போன்ற நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. மக்கள் பயன்பாடு மற்றும் எதிர்கால திட்டங்களை அடிப்படையாக வைத்து ஓடுபாதையை விரிவாக்கத் திட்டம் போடப்பட்டது.
தற்போதைய ஓடுபாதை 7 ஆயிரத்து 500 சதுர அடி நீளத்திற்கு உள்ள நிலையில், அதனை 12 ஆயிரத்து 500 சதுர அடி நீளத்திற்கு விரிவாக்கம் செய்ய சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணி காரணமாக விரிவாக்க பணிகள் மந்தமாக நடந்தது. இந்நிலையில் விமான ஓடுதள விரிவாக்கம் காரணமாக மதுரை சுற்றுச்சாலைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுச்சாலையைத் துண்டித்தால் தென்மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள் கடும் பிரச்சினையைச் சந்திக்க நேரிடும்.
எனவே சுற்றுச்சாலைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள லெய்சிக் விமான நிலைய ஓடுதளத்திற்குள் கீழ் சாலை உள்ளது. அதாவது மேல் சாலையில் விமான ஓடுதளமும், கீழ் சாலையில் வாகன போக்குவரத்தும் இருக்கிறது. இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி லால்பகதூர் விமான நிலையமும் மேற்புற சாலையில் ஓடுதளமும், கீழ்புறத்தில் வாரணாசி- லக்னோ நான்கு வழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் விமான ஓடுதளம் மேற்புறமும், கீழ்புறம் ரிங்ரோடு நான்குவழிச்சாலை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாகவும். அதை நிறைவேற்றும் வகையில் ரன்வேயை (ஓடுதளம்) நீட்டிப்பு செய்யும் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.
ஓடுதளம் விரிவாக்கத்திற்காக வாரணாசி விமான நிலையத்தைப் போல அண்டர்பாஸ் முறை திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி, மேல் பகுதியில் விமான ஓடுதளமும், கீழ்ப் பகுதியில் ரிங்ரோடு அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் மக்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.