'சிறு வயதில் பறிபோன பார்வை'... 'சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்'... 'காத்திருந்த சர்ப்ரைஸ்'... நெகிழ்ந்து போன பூரண சுந்தரி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பார்வை இல்லாதது எல்லாம் ஒரு குறையே இல்லை என நிரூபித்து சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்று அசத்திய, மாணவி பூரண சுந்தரிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் செய்த உதவி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை மணிநகரத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான பூரண சுந்தரி கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 286வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றார். சிறு வயதிலேயே கண்பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பூரண சுந்தரி, தனது விடா முயற்சியால் தேர்வில் வெற்றி பெற்று, கடினமாக முயன்றால் எதுவும் சாத்தியம் எனப் பலருக்கு உதாரணமாக மாறியுள்ளார். இந்த சூழ்நிலையில் பூரண சுந்தரியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிலையில் பூரண சுந்தரிக்கு உதவும் விதமாக அவரின் பார்வை திறனை மேம்படுத்தும் வகையில் கனடா நாட்டிலிருந்து ESIGHT என்ற அதிநவீன பரிசோதனை கண்ணாடியினை சரவணன் வரவழைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து மதுரையில் உள்ள பிரபல கண் மருத்துவமனைக்குப் பூரணி அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குப் பார்க்கும் அனைத்தையும் ஒலியாகக் கொண்டு செல்லும் ஆர்கேம் என்ற அதிநவீன கருவி பொருந்தப்பட்ட கண்ணாடியினை பொருத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் 3 லட்சம் மதிப்பிலான ORCAM கண்ணாடியினை தனது சொந்த செலவில் வழங்கச் சரவணன் முன்வந்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த அதி நவீன கண்ணாடியை வழங்க உள்ளதாகத் தெரிவித்த அவர் அத்துடன் அதிநவீன ORBIT READER என்ற எளிதாகப் படிக்க உதவும் BRAILLE கருவியினையும் வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார். திமுக எம்.எல்.ஏ சரவணன் எடுத்துள்ள இந்த முயற்சி பூரண சுந்தரியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் எம்.எல்.ஏவின் முயற்சிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
