‘வவ்வால்களை பாதுகாப்போம்’.. மாஸ்க் கொடுத்து விநோத விழிப்புணர்வு.. என்ன காரணம்..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்வவ்வால்களை பாதுக்க வேண்டும் என முகக்கவசங்களில் அவற்றின் உருவப்படம் பதித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் வவ்வால் மூலம் பரவியதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் வவ்வால்களை பார்த்தாலே அச்சமடைகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள வவ்வால்களில் இருந்து சேகரிக்கப்பட்ட வைரஸால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நமது பகுதிகளில் வசிக்கும் வவ்வால்களில் இருந்து கண்டறியப்பட்டதில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் வவ்வால்களை கண்டு அச்சமடைந்து அவற்றை விரட்டியுள்ளனர். இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் இயங்கி வரும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், முன்னீர்பள்ளம் முத்தமிழ் பள்ளி மற்றும் நெல்லை இயற்கை சங்கம் ஆகியவை இணைந்து திருநெல்வேலியில் உள்ள குறுக்குத்துறை, சி.என்.கிராமம் மற்றும் மேலவீரராகவபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வவ்வால் படம் அச்சிடப்பட்ட 1000 முகக்கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
இதொடர்பாக தெரிவித்த அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணன், ‘நமது பகுதிகளில் பழந்திண்ணி மற்றும் பூச்சித்திண்ணி வவ்வால்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. இந்த வவ்வால்கள் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை மற்றும் விதைப்பரவலுக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
இலுப்பை, நாவல், அத்தி போன்ற மரங்கள் இவ்வவ்வால்களால் விதைக்கப்பட்டவையே. மேலும் பூச்சித்திண்ணி வவ்வால்கள் நமது விளைநிலங்களில் தீமை செய்யும் பூச்சிகளை உண்டு விவசாயத்துக்கு பெரும் சேவையாற்றுகிறது. இதனால் பொதுமக்கள் வவ்வால்களை கண்டு அச்சமடைய வேண்டாம்’ என அவர் தெரிவித்துள்ளார்.
News Credits: HinduTamil