'வெரிகுட், இந்த சின்ன வயசுலயே பொறுப்போடு வந்துருக்க...' 'மாஸ்க் போடாம சுத்துறவங்ககிட்ட நீ தான் சொல்லணும்...' விழிப்புணர்வோடு சைக்கிளில் வந்த சிறுவன்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 02, 2020 03:32 PM

வயதில் பெரியவர்களே கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் வெளியே சுற்றி வரும் நிலையில் தஞ்சையில் 5 வயது சிறுவன் முகக்கவசம் அணிந்து தனது சைக்கிளில் வந்த செயலை அங்கிருந்த போலீசார் வாழ்த்தி அனுப்பிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

The five-year-old boy on a bicycle wearing a mask with awareness

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் வீட்டுக்குள் இருக்கவும், அத்யாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறும் போலீசார் இரவு பகல் பாராமல் தங்களுடைய கடமைகளை செய்து வருகின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியத்தை உணராத பொதுமக்கள் ஒரு சில இடங்களில் வீட்டை விட்டு தெருக்களில் சுற்றியும், சமூக இடைவெளி பின்பற்றாமல் கூட்டமாகவும், மாஸ்க் அணியாமலும் கடைகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

ஆனால் தஞ்சையில் 5 வயது சிறுவன் செய்த காரியம் போலீசார் அனைவரைக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் அய்யங்கடைத்தெருவில் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்த மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை வழங்கி வந்துள்ளார் தஞ்சாவூர் மேற்குக் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிபவர் செங்குட்டுவன். அந்த சமயம் ஒரு சிறுவன் முகத்திற்கு மாஸ்க் அணிந்து சைக்கிளில் வந்துள்ளான். 

சிவகார்த்திகேயன் என்ற 5 வயதுச் சிறுவனை நிறுத்திய இன்ஸ்பெக்டர் சிறுவன் அணிந்து வந்த முகக்கவசத்தைக் காட்டி இது என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் மாஸ்க் என்று பதிலளித்துள்ளார். மேலும் தனக்கு கொரோனா வைரஸ் வராமல் தடுக்க இதை அணிந்துள்ளதாகவும் தெரிவித்தார் சிவகார்த்திகேயன்.

இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் சிறுவனிடம் 'நாங்கள் இங்கே கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இங்கு பெரியவர்களே கொரோனா பற்றிய  புரிதல் இல்லாமல் மாஸ்க் அணியாமல் வெளியே வந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த சிறு வயதில் நீ மிகுந்த விழிப்புணர்வோடும், பொறுப்புடனும் மாஸ்க் அணிந்து வந்திருக்கிறாய். வெரிகுட் ' என்று சொல்லி வாழ்த்தியுள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயனிடம்  'நீ இங்கு மாஸ்க் அணியாமல் இருப்பவர்களிடம் மாஸ்க் அணிந்து கொண்டுதான் வெளியே செல்ல வேண்டும் என்பதை சொல்ல வேண்டும்' எனக் கூறி அனுப்பி வைத்தார்.

விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கு மத்தியில் இந்தச் சிறுவனைப் போன்றவர்களை பார்க்கும்போது, இரவு பகல் பாராமல் பணியிலிருக்கும் எங்களைப் போன்ற காவல் துறையினருக்கு மன மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது" என்றார்.

இவர்களின் இந்த உரையாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Tags : #AWARENESS #MASK