நெருங்கும் மாண்டஸ் புயல்.. இதையெல்லாம் செய்யாதீங்க.. மக்களுக்கு தமிழக அரசு கொடுத்த வார்னிங்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாண்டஸ் புயல் நாளை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதையடுத்து தமிழக அரசு பொது மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. இந்தப் புயல் தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும் இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்க கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கன முதல் அதிக கன மழை பெய்யலாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளில் தயார் நிலை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் இன்று ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
அதில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்களுக்கும் சில வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, 9-12-2022 இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்கும்படியும், அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் நின்று செல்பி எடுக்கவேண்டாம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மற்ற செய்திகள்
