'வந்த போனை எடுக்கல'...'கூரையை பிச்சிகிட்டு வந்த ஜாக்பாட்'...கோடிகளுக்கு அதிபதியான இளைஞர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Oct 05, 2019 01:08 PM
அதிஷ்டம் யாருக்கு எப்போது அடிக்கும் என தெரியாது என்ற கூற்று உண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் முகமது பயஸ். இவரது பெற்றோர்கள் கிட்னியில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இறந்து விட, பயஸ் தான் குடும்பத்தை கவனித்து வருகிறார். இவருக்கு இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர் உள்ள நிலையில் ஒரு சகோதரியை திருமணம் செய்து கொடுத்து விட்டு, மற்றோரு சகோதரியை படிக்க வைத்து வருகிறார். 24 வயதே ஆன பயஸ், குடும்ப சூழ்நிலை காரணமாக மும்பையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அபுதாபியில் நடக்கும் பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை ஆன்லைனில் வாங்கியுள்ளார். அதனை வாங்கியதோடு மறந்த அவருக்கு, திடீரென வந்த போன் கால் அவரை இன்ப அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. பயஸ் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு 12 மில்லியன் திர்ஹம் பரிசு விழுந்தது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.23 கோடி ஆகும்.
இதனிடையே பரிசு குறித்து பேசிய முகமது பயஸ், ''என்னுடைய வாழ்க்கையில் இந்த தருணத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து இந்த சீட்டினை வாங்கினேன். பரிசு தொகையில் வரும் பரிசினை கொண்டு என்னுடைய இரு சகோதரிகளுக்கு உதவ வேண்டும். விற்ற எனது நிலத்தை திருப்பி வாங்க வேண்டும். மேலும் நான் ஒருமுறை கூட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றதில்லை. இந்த பரிசு தொகைக்கான காசோலையை வாங்குவதற்காக தான் முதல் முறையாக அங்கு செல்ல இருக்கிறேன்'' என நெகிழ்சியுடன் குறிப்பிட்டார்.
முன்னதாக முகமது பயஸுக்கு விழுந்த பரிசு தொகை குறித்து தெரிவிக்க அவருக்கு நான்கு முறை போன் வந்துள்ளது. ஆனால் அவர் அந்த அழைப்பை எடுக்கவில்லை. ஐந்தாவது முறை வந்தபோது போனை எடுத்து பேசிய பயஸ் , தனக்கு பரிசு விழுந்த சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனார். இருப்பினும் ஆன்லைனில் நம்பரை சோதித்த பின்னர் தான் பரிசு தொகை குறித்து முகமது பயஸ் உறுதிப்படுத்தி கொண்டார்.