மருமக பொண்ணுக்கு 500 கிலோ மாலை.. தாய்மாமன் சீருன்னா சும்மாவா.. அசர வைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் காதுகுத்து விழாவில் தனது மருமகளுக்கு 500 கிலோவில் மாலை வாங்கியிருக்கிறார் தாய்மாமன் ஒருவர். கிரேனில் இந்த மாலையினை தூக்கிக்கொண்டு உறவினர்கள் ஊர்வலமாக செல்லும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் மரபில் தாய்மாமா எனும் பந்தம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சகோதரிகளின் குழந்தைகளுக்கு இன்னொரு தாய் போல மக்கள் தாய்மாமனை கருதுகின்றனர். அதேபோல, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதங்களில் தாய்மாமன் சீர் கொடுக்கப்பட்டும் வருகிறது. அதேபோல ஒவ்வொரு விழாவிற்கும் தாய்மாமனிடமிருந்து வரும் சீர்வரிசையும் வித்தியாசப்படும். அந்த வகையில் தனது மருமகளின் காதுகுத்திற்கு 500 கிலோவில் பிரம்மாண்ட மாலையை கிரேன் மூலமாக கொண்டு வந்திருக்கிறார் மதுரைக்கார தாய்மாமன் ஒருவர்.
மதுரையை சேர்ந்தவர் மோகன் குமார். இவர் தனது மருமகளின் காதணி விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார். ஊரே மிரளும்படி விழாவை நடத்த முடிவெடுத்த அவர் நினைத்தபடியே செய்தும் காட்டியிருக்கிறார். 15 அடி நீளமும் 500 கிலோ எடையும் கொண்ட இந்த பிரம்மாண்ட மாலையை கிரேன் ஒன்று சுமந்து செல்ல அதனுடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஊர்வலமாக சென்றிருக்கின்றனர்.
மாலை மட்டும் அல்லாது தோடு, மூக்குத்தி என நகைகள் ஒருபக்கம், புத்தாடைகள், பிற பொருட்கள் என மருமகளுக்கு சீர்வரிசையை சிறப்பாக செய்திருக்கிறார் மோகன் குமார். 500 கிலோ மாலையை வானவேடிக்கையுடன் காதணி விழா நடைபெறும் இடத்திற்கு கொண்டுவர அங்கே உறவினர்கள் தாய்மாமனுக்கு வரவேற்பும் நடைபெறுகிறது.
நண்பர்கள் உறவினர்கள் என திருவிழா போல திரண்ட கூட்டத்திற்கு மத்தியில் காதணி விழா சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்நிலையில் கிரேனில் தாய்மாமன் மாலை தூக்கிவரப்பட்ட இந்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.