"ஸ்கூல் முடிஞ்சா நேரா அங்க தான்".. பள்ளி சீருடையில் தாய்க்கு உதவியாக கடலை வியாபாரம்.. மாணவியின் மனம் நெகிழ வைக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபள்ளி சீருடை அணிந்து மாணவி ஒருவர் கடலை வியாபாரம் செய்து வருவது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இதன் பின்னணி என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பள்ளி மாணவி வினுஷா. 12 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், பள்ளி முடிந்த பிறகு அதன் அருகில் அமைந்துள்ள பகுதியில் தள்ளுவண்டி ஒன்றில் கடலை வியாபாரமும் செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த தொழிலை தனது தாயாரின் உதவிக்காக வினுஷா செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த சில தினங்களாக வினுஷாவின் தாயார் உடல்நிலை சரியாக இல்லாததால் இவரும் இதனை கவனித்து வருகிறார்.
இது பற்றி பேசும் பள்ளி மாணவி வினுஷா, "வாடகை வீட்டில் தான் நாங்கள் வசித்து வருகிறோம். சகோதரியின் திருமணத்திற்கு பிறகு எங்களுக்கு கடன் ஏறிவிட்டதால் நெருக்கடி உருவானது. இதனால் அம்மாவிற்கு உதவி செய்வதற்காக இந்த பணியை செய்து வருகிறேன். தினம் தோறும் 500 ரூபாய் வரை கிடைக்கும். அதில் கடலை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கான பணம் சென்றால் மீதம் ஒரு 150 ரூபாய் கையில் இருக்கும்.
கடலை வியாபாரம் செய்வதை நினைத்து வெட்கப்பட எதுவுமில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக இதை செய்கிறேன். இதில் நான் வெட்கப்பட எதுவுமே இல்லை. சின்ன வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற ஆசை. ஆனால் காமர்ஸ் குரூப் எடுத்துள்ளதால் எம்பிபிஎஸ் படிக்க முடியாது. இதனால் மருத்துவம் சார்ந்த வேறு துறையை தேர்ந்தெடுப்பேன்" என தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவி வினுஷா பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே கடலை வியாபாரம் செய்து வருவது தொடர்பான விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வந்த நிலையில், ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜாவுக்கும் இந்த தகவல் போய் சேர்ந்துள்ளது. மேலும் வேலையில் இனிமேல் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாணவி வினுஷாவுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
அதே போல, மாணவியின் படிப்பு செலவுக்காக உதவிகள் செய்து கொடுப்பதாகவும் ஆட்சியர் கிருஷ்ண தேஜா உறுதி அளித்துள்ளார். பள்ளி மாணவியாக இருந்த போதிலும், சிறு வயதிலேயே இப்படி குடும்ப சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டு வரும் மாணவியின் செயல், பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
