திருடிய பணத்தில் புது பைக்.. வாட்சப் ஸ்டேட்டசால் வசமாக சிக்கிய கும்பல்.. சினிமாவை மிஞ்சிய ஸ்கெட்ச்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை அருகே திருடிய பணத்தில் புது பைக் வாங்கிய இளைஞரை காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இது அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பொந்துகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். காலையில் வியாபாரத்திற்கு செல்லும் முனுசாமி வழக்கமாக இரவில் தான் வீட்டிற்கு திரும்புவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வழக்கம் போல வெளியூர் சென்று விட்டு முனுசாமி தனது வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்த முனுசாமி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
உடனடியாக உள்ளே சென்று அவர் பார்த்தபோது பீரோ கதவுகளும் திறந்து கிடந்திருக்கின்றன. அதை பரிசோதித்த முனுசாமி தான் வைத்திருந்த 90 ஆயிரம் ரூபாய் காணாமல்போய் இருப்பதை உணர்ந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து இருக்கிறார். உடனடியாக இதுகுறித்து பாலமேடு காவல் நிலையத்தில் முனுசாமி புகார் ஒன்றை அளித்திருக்கிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முனுசாமியிடம் பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர்.
அப்போது இந்த திருட்டில் யார் மீதாவது உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? என காவல்துறையினர் முனுசாமியிடம் கேட்டதாக தெரிகிறது. அப்போது தனது அண்டை வீட்டில் வசித்து வரும் சோனையா என்பவரது இளைய மகன் வெள்ளைச்சாமி மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக முனுசாமி காவல்துறை அதிகாரிகளிடத்தில் கூறியுள்ளார். தனது அன்றாட செலவுகளுக்கே தான் கஷ்டப்படுவதாக சோனையா கூறியதாகவும் சமீபத்தில் அவரது இளைய மகன் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கி இருப்பதாகவும் முனுசாமி தெரிவித்திருக்கிறார்.
இதனை அடுத்து காவல்துறையினரின் கவனம் வெள்ளைச்சாமி மீது விழுந்து இருக்கிறது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. வெள்ளைச்சாமி அவரது அண்ணன் சேது மற்றும் நண்பன் கேசவன் ஆகியோர் சேர்ந்து முனுசாமி வீட்டிற்குள் சென்று பணத்தை திருடியது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்த பணத்தைக் கொண்டு இரு சக்கர வாகனத்திற்கு முன்பணம் கட்டி பைக்கையும் வெள்ளிச்சாமி வாங்கியிருக்கிறார்.
அதனை வெள்ளைச்சாமி மற்றும் அவர்கள் சகோதரர் வாட்சப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருக்கின்றனர். இதனை அடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அவர்களிடம் இருந்த மீதி பணத்தை போலீசார் கைப்பற்றி அவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்திருக்கின்றனர். திருடிய பணத்தில் புது பைக் வாங்கி அதனை ஸ்டேட்டஸில் வைத்திருந்த இளைஞர் மற்றும் அவரது சகோதரர், நண்பர் கைது செய்யப்பட்ட விவகாரம் பாலமேடு பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | கிறிஸ்துமஸ் Gift.. ரொனால்டோ-க்கு காதலி கொடுத்த சர்ப்ரைஸ்.. வாயடைச்சுப்போன நெட்டிசன்கள்.. வீடியோ..!