'ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையான மனசு'... குவியும் பாராட்டுகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 16, 2019 01:20 PM

தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் கொண்டு வந்த 69 லட்ச ரூபாயை, காவல்துறையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ambulance staff handover accident victims cash rs 69 lakh to police

சென்னை மாதவரத்தில் இரும்பு வியாபாரம் செய்துவரும் வியாபாரி ஒருவர், நிலுவைத் தொகையை வசூல் செய்து வர, சனிக்கிழமையன்று வேலூர் மாவட்டத்துக்கு தன்னுடைய ஊழியர்களை அனுப்பி வைத்தார். 69 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை வசூல் செய்த ஊழியர்கள், அங்கிருந்து பணத்துடன் காரில் சென்னை திரும்பினார்கள். காஞ்சிபுரம், சின்னையன் சத்திரம் வழியாக பயணம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த முரளி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த இருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் வந்ததும், மருத்துவ உதவியாளர் விஜயன் மற்றும் ஓட்டுநர் சந்தானம் படுகாயமடைந்த இருவருக்கும் முதலுதவி செய்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் விபத்தின்போது காரில் சிதறிக் கிடந்த 69 லட்ச ரூபாயைக் கொண்டுவந்து காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலையத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஒப்படைத்தனர். 108 ஆம்புலன்ஸின் ஊழியர்களின் நேர்மையைக் கண்டு காவல்துறையினர் மட்டுமில்லாது அனைவரும் அவர்களைப் பாராட்டி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #AMBULANCE #VELLORE #CHENNAI