'கொரோனா விழிப்புணர்வை பகிரும் போர்வையில்...' 'கோளாறான' ஆட்களும் 'நிறைய பேர்' இருக்காங்க.... 'ஜாக்கிரதை பெண்களே...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Apr 15, 2020 11:04 AM

கொரோனா விழிப்புணர்வு தகவல்களை அனுப்பி நட்பாக பழகி, சென்னை பெண்ணின் படத்தை ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக பணம் கேட்டு மிரட்டிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

Man arrested for threatening to publish image of woman

சென்னை புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு இ-மெயில் மூலம் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மனைவியிடம் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் நட்பாக பழகி வந்த நபர் ஒருவர், அவரது புகைப்படத்தை வலைதளம் மூலம் எடுத்து ஆபாசமாக மார்ஃபிங் செய்து மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளார். பணம் தராவிட்டால் சமூக வலைதளங்களில் ஆபாச புகைப்படங்களை வெளியிடப் போவதாக மிரட்டுவதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம், கிழக்கு தெருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பது தெரியவந்தது. கணினி அறிவியல் பொறியாளரான அவரை போலீசார் கைது செய்த விசாரித்தனர்

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிவக்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுகன்யா, பிரியா என்ற பெயரில் 2 போலி கணக்குகள் வைத்துள்ளார். அதன் மூலம் பல பெண்களுடன் நட்பாக பேசி பழகி வந்துள்ளார். மேலும், அவர்களின் புகைப்படங்களையும் சேகரித்து அவற்றை ஆபாசமாக மார்பிங் செய்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சிவக்குமார் பெண்களின் நம்பிக்கையை பெறுவதற்கு கொரோனா விழிப்புணர்வு செய்திகளை அடிக்கடி பகிர்ந்துள்ளார். அதனை உண்மை என நம்பிய பல பெண்கள் அவருடன் இயல்பாக பேசி தங்களது தகவல்களையும் பகிர்ந்து வந்துள்ளனர்.  அப்போது அவர்களின் வலைத்தள பக்கத்தில் இருந்து படங்களை எடுத்து ஆபாசமாக சித்தரித்து அதனை சமூக வலைத்தளங்களில் போட்டுவிடுவதாக மிரட்டி வந்துள்ளார்.

இதேபோன்று நட்பாக பேசிவந்த நிலையில் தான், சென்னை புதுப்பாக்கம் பகுதியைச் சேந்தவரின் மனைவியை போலி இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் ரூ.50 ஆயிரம் கேட்டுமிரட்டி உள்ளார்.

வருகிற 16-ந் தேதிக்குள் பணம் தராவிட்டால் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துவிடுவதாகவும், அவர் வசிக்கும் தெருவில் போஸ்டர் அடித்து ஒட்டிவிடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோய் அந்த பெண் தன்னுடைய கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார், சிவக்குமாரை கைது செய்து அவரின் செல்போனை வாங்கி பரிசோதித்தனர். அந்த செல்போனில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து சேமித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சிவக்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.