குழந்தைகளின்... சட்டவிரோத வீடியோக்கள்... தமிழகத்தில் முதல் ‘கைது’...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 12, 2019 11:36 AM
குழந்தைகளின் சட்டவிரோத (ஆபாச) படத்தை பதிவேற்றம் செய்தது மற்றும் பகிர்ந்தது தொடர்பாக திருச்சியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளின் சட்டவிரோத படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தல், பகிர்தல் உள்ளிட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார். பாலியல் குற்றங்களை ஆரம்பத்திலேயே தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இது தொடர்பாக 3000 பேர் கொண்ட பட்டியலில் உள்ளவர்கள், மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, தகவல் அறிக்கை பதிவு செய்த பின்பு முறையாக அழைத்து விசாரிக்கப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (42) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐடிஐ ஏசி மெக்கானிக் பயின்ற இவர், நாகர்கோவிலில் பணியாற்றி வந்துள்ளார்.
‘நிலவன் நிலவன், ஆதவன்’ ஆகிய பெயர்களை கொண்ட, போலி ஃபேஸ்புக் கணக்குகள் மூலம், குழந்தைகளின் சட்டவிரோத படங்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளின் சட்டவிரோத படங்களை 15 பேருக்கு, பேஸ்புக் மெசேஞ்ஜர் மூலமாக அனுப்பியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் குழந்தைகளின் சட்டவிரோத படங்களை பரப்பினால், 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு என்று போலீசார் தெரிவித்திருந்த நிலையில், குழந்தைகள் சட்டவிரோத வீடியோவை பகிர்ந்த குற்றத்துக்காக தமிழகத்தில் கைதாகும் முதல் நபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.