'மத ரீதியா பிரிக்காம இருந்திருந்தா இந்த குடியுரிமை மசோதா திருத்தம் தேவையே இல்லையே?!' - அமித் ஷா ஆவேசம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Dec 12, 2019 11:05 AM
மக்களவையில் 311 உறுப்பினர்களின் ஆதவுடனும், 80 உறுப்பினர்களின் எதிர்ப்புடனும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதவை, மாநிலங்களவையிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு விவாதங்களுக்கு பிறகு தேர்வுக்குழு வாக்கெடுப்பு நடந்தது. இதன் முடிவில் மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகி மக்களவையைப் போலவே மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை நிறைவேற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, இந்திய தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கான முக்கியமான நாளாக இதை கருதுவதாக ட்வீட் பதிவிட்டார். மேலும் இம்மசோதா பல ஆண்டுகளாக துன்பத்தில் இருந்த பலரின் துயரத்தை நீக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இந்த மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும், இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த அகதிகளுக்கும் எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் முன்வைத்தனர். இந்த கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிகள் குடியுரிமைக்கு விண்ணப்பித்தால், இந்தியா அதை கருத்தில் கொள்ளும் என்றும், ஆனால் இந்நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் மதரீதியிலான துன்புறுத்தல்களை எதிர்கொள்ளாததால், இந்த சட்டத் திருத்தம் அவர்களுக்கு பயனளிக்காது என்றும் பேசியுள்ளார்.
மேலும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பின், உருவான புதிய இந்தியாவில் இருந்து முதலில் பாகிஸ்தானும், பிறகு பாகிஸ்தான் பிரிந்து வங்கதேசம் உருவான போதும் இரு நாடுகளுமே சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்காததாலும், அவை பிரிந்ததாலுமே இந்த மசோதாவுக்கான தேவை எழுந்துள்ளதாக அமித் ஷா ஆவேசமாகக் கூறியுள்ளார். மேலும் இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல, ஊடுருவல்காரர்களுக்கு எதிரானது என்றும் பேசிய அமித் ஷா, சாஸ்திரி-பண்டாரநாயகே ஒப்பந்தத்தின் போது, இலங்கை தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு முதல் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்டு இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
