'கடைசியா அனுப்பிய மெசேஜ்'... 'வீட்டுக்குள்ளேயே இருந்த கொலையாளி'... 'இளம்பெண்ணின் மர்ம மரணம்'... வெளியான அதிரவைக்கும் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமாகி இரண்டே மாதத்தில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த மர்மம் விலகியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வெங்கடையா பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர், உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் பல்வேறு வரலாற்றுக் கல்வெட்டு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டும் வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், செந்தாரகை என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 24-ந்தேதி மகள் செந்தாரகைக்கும், உத்திரமேரூர் நரசிம்ம நகரைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாகத் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணமான புதுமண தம்பதி வண்டலூரில் வசித்து வந்தார்கள். இதற்கிடையே கடந்த ஜூன் மாத இறுதியில் செந்தாரகை தன்னுடைய தாய் வீட்டுக்கு திடீரென வந்தார். அப்போது அங்கிருந்த குளியல் அறையில் செந்தாரகை வழுக்கி விழுந்து இறந்ததாக அவரது பெற்றோர் கூறிய நிலையில், அவசர அவசரமாகப் பெண்ணின் உடலை அடக்கம் செய்ய அவரது பெற்றோர் முயன்றார்கள். இதனால் சந்தேகம் அடைந்த பாலாஜியின் உறவினர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்கள். சம்பவ இடத்திற்கு வந்த உத்திரமேரூர் போலீசார் செந்தாரகையின் சாவில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். திருமணமாகி சில மாதங்களே ஆனதால் காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன் விசாரணை நடத்தினார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் செந்தாரகை கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து உத்திரமேரூர் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் செந்தாரகையின் தந்தை பாலாஜியைக் கைது செய்து விசாரித்தனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதில், ''செந்தாரகை திருமணத்துக்கு முன்பு வேறு ஒரு நபரைக் காதலித்து வந்தார். ஆனால் அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலாஜி, மகளை மிரட்டி அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். அரை மனதுடன் கணவனுடன் சென்ற செந்தாரகையால் அங்கு இருக்க முடியவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். செந்தாரகையின் பெற்றோர் அவரை சமாதானம் செய்யப் பல வகையில் முயன்றும் பலன் அளிக்கவில்லை. மேலும் அவரை சுதந்திரமாக வெளியில் செல்லக் கூட விடாமல் தடுத்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தந்தை பாலாஜி, மகளின் கழுத்தை நெரித்துப் பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் மயங்கி விழுந்த செந்தாரகை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும், பின்னர் போலீசுக்குப் பயந்து குளியல் அறையில் வழுக்கி விழுந்து இறந்ததாகக் கூறியதும் தெரிந்தது.இந்நிலையில் உயிரிழப்பதற்கு முன்பு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.
அதில், தனக்கு இங்கு இருக்கப் பயமாக இருக்கிறது என்றும், தன்னை வந்து கூட்டிச் செல்லுமாறும் அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். எனவே செந்தாரகை ஏற்கனவே தனது பெற்றோர் குறித்து அச்சம் கொண்டது தற்போது தெரியவந்துள்ளது. தந்தையே சொந்த மகளைக் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.