'காதல் கல்யாணம்'... 'ஆசை ஆசையாய் திருமண வாழ்க்கையை ஆரம்பித்த இளம் மருத்துவர்'... நெஞ்சில் இடியாய் இறங்கிய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல கனவுகளுடன் திருமண வாழ்க்கையை ஆரம்பித்த இளம் மருத்துவருக்கு நடந்துள்ள துயரம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த மருத்துவர் அசோக் விக்னேஷ். இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதுநிலைப் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் மயக்கவியல் துறையில் பட்ட மேற்படிப்பு படித்த பெண் மருத்துவர் ஹரி ஹரிணியும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் குறித்துப் பெற்றோருக்குத் தெரிய வந்த நிலையில், இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப் பெற்றோர் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. காதல் திருமணம் கைகூடிய மகிழ்ச்சியில் இருவரும் தங்கள் மண வாழ்க்கையை மகிழ்ச்சியோடு ஆரம்பித்தனர். இதையடுத்து மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குறியிருப்பில் இருவரும் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி ஹரி ஹரிணிக்குக் காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டுள்ளது. இருவரும் மருத்துவர்கள் என்பதால் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு ஹரி ஹரிணியின் கணவர் வீட்டிலேயே சிகிச்சை அளித்துள்ளார். ஹரி ஹரிணிக்கு உடல்வலி அதிகமாக இருந்ததால், அவரது கணவர் அசோக் ஊசி ஒன்றைப் போட்டுள்ளார்.
ஆனால் ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவர் ஹரி ஹரிணி சுருண்டு விழுந்தார். மனைவி திடீரென சுருண்டு விழுந்ததைப் பார்த்த அவரது கணவர் அசோக் அதிர்ந்து போனார். உடனே அவரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மாட்டுத்தாவணியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரி ஹரிணி பரிதாபமாக இறந்து போனார். மகளின் மரணச் செய்தி கேட்டுத் துடித்துப் போன ஹரி ஹரிணியின் தந்தை ரவீந்திரன், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே சிலருக்கு சில மருந்து மாத்திரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். சில நேரங்களில் அதிதீவிர ஒவ்வாமையாக மாறி மூச்சுக்குழல் சுருங்கியும், இதய ஒட்டம் நின்றும் மரணம் நிகழும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் உயிரிழந்த பெண் மருத்துவரின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.
ஹரி ஹரிணி திருமணமான 4 மாதங்களில் உயிரிழந்து இருப்பதால் உதவிக்கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். ஆசை ஆசையாகக் காதலித்து, திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்த நேரத்தில் உடல்வலிக்குப் போட்டுக்கொண்ட ஊசி இளம் மருத்துவரின் உயிரைப் பறித்துள்ள சம்பவம் மதுரையில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.