‘வரிசை கட்டி வந்த 100 கார், மாட்டுவண்டி’.. கிழக்குச் சீமை படத்தை விஞ்சிய சம்பவம்.. வாயடைத்து நின்ற ஊர்மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தங்கை மகள்களின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு 100 கார்களில் சென்று தாய்மாமன் சீர் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ராஜா. இவர் அப்பகுதியில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தங்கை மோகனப் பிரியாவுக்கு திருமணமாகி ரிதன்யா, மித்ராஸ்ரீ என்ற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இரண்டு பெண் பிள்ளைகள் பூப்பெய்து விடவே, அவர்களுக்கு சடங்கு செய்யும் நிகழ்வு கள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் நடத்த திட்டமிட்டனர்.
இதனால் தாய்மாமனான ராஜா தங்கையின் மகள்களுக்கு சிறப்பான முறையில் சீர் செய்ய திட்ட்மிட்டார். அனைத்தும் பாரம்பரிய முறைப்படி செய்ய முடிவு செய்த அவர், 100-க்கும் மேற்பட்ட தட்டுகளில் சீர் வரிசைகளை அடுக்கி 15-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் உறவினர்கள் புடைசூழ கோபிசெட்டிபாளையில் இருந்து கள்ளிப்பட்டிக்கு சென்றுள்ளார். அதில் ஒரு மாட்டுவண்டியை ராஜாவே ஓட்டுக்கொண்டு வந்துள்ளார்.
அவருக்கு பின்னால் மாட்டுவண்டி, குதிரை வண்டிகள் மட்டுமல்லாமல், 100 கார்களிலும் பின்னால் அணிவகுத்து சென்றுள்ளது. பிரமாண்ட தாய்மாமன் சீரைப் பார்த்த மக்கள் வாயடைத்துப் போய் பார்த்துள்ளனர். மேலும் விழா நடைபெறும் தோட்டத்தில் தென்னை ஓலையில் வேய்ந்த குடிசையில் பாரம்பரிய ரக நெல் மணிகளைக் கொட்டி, அதில் சீர் வரிசை தட்டுகளை அடுக்கி வைத்தனர். அதேபோல் பித்தளை பாத்திரங்களில் பாரம்பரிய உணவுகள் சமைத்து பறிமாறப்பட்டன.
மேலும் தாய்மாமன் சீராக காங்கேயம் காளைகள், வெள்ளாடுகள் போன்றவையும் வழங்கப்பட்டன. இதுகுறித்து தெரிவித்த தாய்மாமன் ராஜா, பாரம்பரியத்தைப் பறைசாற்றவும், வருங்கால சந்ததிகள் பாரம்பரியத்தை நினைவு கூறவும், என் தங்கை மகள்களுக்கு பாரம்பரிய முறைப்படி பூப்புனித நீராட்டு விழா நடத்தினேன்’ என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
