‘அன்னைக்கு கைகொட்டி சிரிச்சாங்க’!.. ‘இப்போ பிரதமர் கிட்ட இருந்து பாராட்டு’.. ‘படிச்சது 8 வரை தான்’.. திரும்பிப் பார்க்க வச்ச மதுரைக்காரர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாழை நாரிலிருந்து கைவினை பொருட்கள் தயாரித்து வரும் மதுரையைச் சேர்ந்த முருகேசனை மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.

மதுரை மேலக்கால் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (52). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், 8ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தினார். பின்னர் தந்தையுடன் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஆனால் விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என முருகேசன் எண்ணியுள்ளார்.
அதன்படி கடந்த 2009ம் ஆண்டு வாழை நார்களை கொண்டு கயிறு தயாரித்து, அதன்மூலம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் முருகேசன் இறங்கியுள்ளார். அதற்காக வாழை கழிவுகளில் இருந்து கயிறு தயாரிக்க நான்கு இயந்திரங்களை உருவாக்கி, அதில் மூன்றிற்கு காப்புரிமையும் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த மான் கி பாத் நிகழ்ச்சியில் முருகேசனை பாராட்டி பிரதமர் மோடி பேசினார். அதில், ‘முருகேசனின் கண்டுபிடிப்பு கழிவுகளை அகற்றும் பிரச்சனையை தீர்ப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு புதிய வருமான வழிகளை அடையாளம் காணவும் தூண்டியுள்ளது’ என பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.
இதுகுறித்து தெரிவித்த முருகேசன், ‘பிரதமரிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேவேளையில், கடுமையாக உழைப்பதற்கும், நாடு முழுவதும் உள்ள பல விவசாயிகளுக்கு இத்தகைய வாழ்வாதாரம் அளிக்கக்கூடிய தொழில் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கவும் ஊக்கமளித்துள்ளது’ என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘வாழை நாரை ஒரு பொருளாக விற்க முடியாது என்பதால், அதிலிருந்து கயிறு உருவாக்கி கைவினைப் பொருட்கள் தயாரிக்க முடிவு செய்தேன். அப்போது என்னைப் பார்த்து பலரும் கைகொட்டி சிரித்தார்கள். ஆனால் இன்று அவர்களே கைதட்டி பாராட்டுகிறார்கள். 2011-ம் ஆண்டு வெறும் 6 தொழிலாளர்கள் மட்டுமே வேலை பார்த்தனர். இப்போது 80 தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனமாக உயர்ந்துள்ளது’ என பெருமையோடு முருகேசன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
