'மேட்ரிமோனியலில் வந்த வரன்'... 'எனக்கு லண்டன் டாக்டர் மாப்பிள்ளை கிடைச்சிட்டாரு'... திருமண கனவிலிருந்த பெண்ணின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட மர்ம மனிதன்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேட்ரிமோனியல் மூலமாக வரும் வரன்களைச் சரிவர விசாரிக்காமல் விட்டால் எவ்வளவு மோசமான சூழ்நிலையில் சிக்குவோம் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது இந்த சம்பவம்.

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் மேட்ரிமோனியலில் மூலமாகத் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். அப்போது அறிமுகமான நபர் ஒருவர் தான் லண்டனில் பிரபல மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண், அந்த நபரோடு போனில் பேசியுள்ளார். நாள்கள் செல்ல செல்ல இருவரும் நெருக்கமான நிலையில் தினமும் போனில் பேசி வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் உன்னை எனக்கு மிகவும் பிடித்து விட்டது, நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த நபர் கூறியுள்ளார்.
இதையடுத்து தான் இந்தியா வருவதாகக் கூறியதோடு, உன்னைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் எனக் காதல் வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளார். அந்த பெண்ணும் ஆவலாகக் காத்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென போன் செய்த அந்த நபர் தான் இந்தியா வந்து விட்டதாகவும், டெல்லி விமான நிலையத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். உடனே தான் அதிகமாகத் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டு வந்ததால் விமான நிலைய அதிகாரிகள் என்னைப் பிடித்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
அதோடு தன்னை விசாரணைக்காக அழைத்துச் செல்ல இருப்பதாகவும் கூறிய அந்த நபர், 16 லட்சம் அபராத தொகையினை கட்டினால் தன்னை விடுவித்து விடுவதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். இதை அனைத்தையும் நம்பிய அந்த பெண், எதைப் பற்றியும் யோசிக்காமல் தனது வருங்கால கணவர் தானே என்ற எண்ணத்தில் அவர் கேட்ட 16 லட்ச ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கு மூலம் அனுப்பியுள்ளார்.
பணம் வந்து விட்டதாக அந்த நபர் கூறிய பின்னர் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் அந்த பெண்ணுக்கு வரவில்லை. இதனால் பதறிப்போன அந்த பெண் லண்டன் மாப்பிள்ளைக்கு போன் செய்துள்ளார். அப்போது அவரது எண் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் காவல்துறையில் அளித்துள்ளார். லண்டன் மாப்பிள்ளை என வந்த மர்ம மனிதன் 16 லட்சத்தைச் சுருட்டிவிட்டுப் போன சம்பவம் அந்த பெண்ணை நிலைகுலையச் செய்துள்ளது.

மற்ற செய்திகள்
