‘தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை’ மக்களவைத் தொகுதிகள் 3-லும் திமுக முன்னிலை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | May 23, 2019 10:51 AM
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, இன்று காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில், 37 இடங்களில் திமுக முன்னிலை வகிப்பதாக முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.
தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாக, முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்சென்னை தொகுதியின் முந்தைய நாடாளுமன்ற உறுப்பினராக 2009-2014 காலக்கட்டத்தில் திமுகவின் சார்பில் தயாநிதி மாறன் பதவி வகித்தார்.
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர். விஜயகுமார் இருக்கிறார். இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டை பொருத்தவரை, நட்சத்திர வேட்பாளர்களை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் களமிறக்கின. அதன்படி, தென் சென்னையின் தேர்தல் வேட்பாளராக திமுக சார்பில் எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியனும், அதிமுக சார்பில் ஜே.ஜெயவர்தனும் போட்டியிட்டுள்ளனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் இருக்கிறார்.
வடசென்னையைப் பொருத்தவரை, திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, 26 ஆயிரம் வாக்குகளைக் கடந்து முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாம் இடத்தில் தேமுதிக இருந்து வருகிறது. இதேபோல், மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.