'வீட்டில் புகுந்த நல்ல பாம்பு'...' இது பாம்பு இல்ல அம்மன்'...பாம்பின் முன்பு ஆடிய பெண்ணால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 29, 2019 09:22 AM

வீட்டில் புகுந்த பாம்பை பிடிக்க விடாமல், அதன் முன்பு சாமி ஆடிய பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore woman dancing in front of 6 feet Cobra

கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் வசிப்பவர் சரஸ்வதி. இவரது வீட்டில் இன்று காலை திடீரென 6 அடி நீள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாம்பு பிடிக்கும்  உயிரின ஆர்வலர் செல்லா என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பாம்பு புகுந்த தகவல் பரவ அந்த பகுதியில் மக்கள் அதிகமாக கூடினார்கள்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த  உயிரின ஆர்வலர் செல்லா நீண்ட நேரமாக பாம்பை தேடினார். ஆனால் அது அவ்வளவு எளிதில் அகப்படவில்லை. இதையடுத்து வீட்டின் மேற்க்கூரையில் இருந்த பாம்பு திடீரென படம் எடுத்து ஆட தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்களுக்கு பதற்றம் தொற்றி கொண்டது. இதனிடையே ஒரு பக்கம் பாம்பு படம் எடுத்து ஆட, திடீரென வீட்டின் உரிமையாளர் சரஸ்வதி சாமி வந்தது போல ஆடினர்.

அதோடு பாம்பை பிடிக்க கூடாது எனவும், அது பாம்பு இல்லை அம்மன் எனவும் கூறி கொண்டு ஆடினார். இதனால் அங்கு மேலும் பரபரப்பு தொற்றி கொண்டது. மேலும் அவர் சாமி ஆடி கொண்டிருந்ததால் பாம்பை பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சாமி ஆடிய சரஸ்வதி சோர்வடைந்து கீழே அமர, இது தான் சரியான நேரம் என, உயிரின ஆர்வலர் செல்லா பாம்பை லாவகமாக பிடித்தார்.

அதன் பின்னர் செல்லா, சரஸ்வதி எதிரிலேயே பாம்பை டப்பாவில் அடைத்து அதனை அங்கிருந்து எடுத்து சென்றார். பின்னர் பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்படும் என தெரிவித்தார். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : #CUDDALORE #SNAKE #COBRA #DANCE