'கைவிட்ட மருத்துவர்கள்'...'தோள்கொடுத்த அண்ணன்'...'தன்னம்பிக்கை' நாயகியான மாணவி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Dec 02, 2019 04:10 PM
தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் உடல் ஊனம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என நிரூபித்து இருக்கிறார் கோவையை சேர்ந்த பள்ளி மாணவி ராதிகா.

கோவை அருகே பாப்பம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் - ஜெயா தம்பதிக்கு இளைய மகளாக பிறந்தவர் ராதிகா. சிறு வயதில் மற்ற குழந்தைகளை போல விளையாடிக் கொண்டிருந்த ராதிகாவின் வாழ்கை, 5 வயதில் தலைகீழாக மாறிப்போனது. அந்த வயதில் விளையாடிக் கொண்டிருந்த ராதிகா திடீரென நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். அதனைத் தொடர்ந்து ராதிகாவுக்கு தொடர்ந்து காலில் வலி அதிகமானது. அப்போது எலும்பில் ஏதேனும் முறிவு ஏற்பட்டிருக்கலாம் என எண்ணிய பெற்றோர் அவரை மருத்துவர்களிடம் காட்டினார்கள்.
அப்போது ராதிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அளித்த பரிசோதனை முடிவு ராதிகாவின் பெற்றோரை அதிர செய்தது. ராதிகாவின் உடல் எலும்புகள் அனைத்தும் பலவீனமாக இருப்பதும் மற்ற குழந்தைகளை போல இனி அவரால் ஒடியாடி விளையாட முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். தினமும் அலைக்கழிக்கப்பட்ட ராதிகாவுக்கு இரண்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது என மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள்.
இதையடுத்து அவரால் பள்ளிக்கு சென்று கல்வி கற்க முடியாமல் தவித்த ராதிகா, வீட்டிலிருந்து கல்வி கற்கக் வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதன் காரணமா ஏற்பட்ட தனிமை அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. ஒரு கட்டத்தில் தனிமையின் வாட்டத்திலிருந்து தாண்டி வர நினைத்த அவர், கைவினைப் பொருட்களை செய்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். தங்கையின் எண்ணத்தை புரிந்து கொண்ட அண்ணன் ராஜ்குமார், சமூக வலைதளத்தில் கைவினைப் பொருட்கள் செய்யும் செயல்முறை விளக்கத்தை மேற்கொள் காட்டினார். இதனை பார்த்த ராதிகாவிற்கு கைவினை பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்க தொடங்கியது.
இதன் காரணமாக வீட்டில் நாள்தோறும் வாங்கும் நாளிதழ்களை எடைக்கு போடாமல் அதையே மூலப் பொருளாகக் கொண்டு காகிதத்தால் பலவகையான வண்ணக் கலர்களில் கைவினைப் பொருட்களை உருவாக்கியதன் மூலம் அந்த பகுதியில் பிரபலமாக தொடங்கினார். ஆப்ரிக்க பொம்மைகள், போட்டோ பிரேம்கள், தொப்பிகள், கூடைகள் மற்றும் கிட்டார் போன்ற இசைக் கருவிகள் என விதவிதமான கைவினைப் பொருட்களை தயாரித்துக் கொண்டு கல்வி கற்கும் போதே வருமானமும் ஈட்ட தொடங்கினார்.
எனக்கு வாய்ப்பு ஒன்றுமே அமையவில்லை என புலம்புவார்கள் மத்தியில், இயலாமை ஒன்று இல்லை என நிரூபித்து காட்டியிருக்கும் ராதிகாவின் விடா முயற்சி, நிச்சயம் பலருக்கு இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் மிகையாகாது.
