சென்னை: லிட்டில் மவுண்ட் மெட்ரோ பாலங்களில் கண்ணை கவரும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.

சென்னை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இதனால் அதிகம் பாதிப்படைகின்றனர். இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோ ரயில் செல்லும் பாதை பாலங்கள் மேலேயும் சில இடங்களில் சுரங்கம் தோண்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ நிர்வாகம் அதிரடி
மெட்ரோ ரயில் பாலங்கள் பெரிய தூண்களை போல் இருப்பதால் அரசியல் கட்சியினர், பல்வேறு தரப்பினரும் விளம்பர சுவரொட்டி, போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இதனை தடுக்க மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இனி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சொந்தமான தூண்கள் மற்றும் சுவர்களில் போஸ்டர் ஒட்டினால் 6 மாதம் சிறையோ, 1000 ரூபாய் அபராதமோ அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்தது. இருப்பினும் போஸ்டர் ஒட்டுபவர்கள் இதை போட்டு கொண்டதாக தெரியவில்லை.
பாலங்களில் ஓவியம்
எத்தனை முறை போஸ்டர்களை அகற்றினாலும் மீண்டும் மீண்டும் அதே தவறைத்தான் செய்கிறார்கள். இதற்கு சிறந்த வழி எதுவென்று பார்த்தால் ஓவியங்களை வரைவது தான் முறையாக இருக்கும். குறிப்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள மெட்ரோ பாலங்களில் மக்களை கவரும் விதமாக ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதற்கென்று அம்மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து பாதுகாத்து வருகிறது. சட்ட விரோதமாக போஸ்டர் ஒட்டுபவர்களையும் ரசிக்க வைக்கும் ஓவியங்களாக இருக்கின்றன. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
சூப்பராக மாறும் சென்னை
இதேபோன்று சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளான விமானம் நிலையம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை, கோயம்பேடு மேம்பாலம், அண்ணா மேம்பாலம், மெரினா கடற்கரை, மெட்ரோ ரயில் நிலைய துாண்கள், திருமங்கலம் மேம்பாலங்கள் அழகுப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்றது. வண்ண ஓவியங்கள் வரைதல், மரம், செடிகளை நட்டு பசுமையாக பராமரித்தல், வண்ண ஒளிரும் விளக்குகளால் அழகு படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
அசத்தலான புகைப்படம்
அந்தவகையில், லிட்டில் மவுண்ட் மெட்ரோ பாலங்களில் அழகு அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பார்ப்போரை ஈர்க்கும் வகையிலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, இயற்கையை போற்றும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வழியாக செல்லும் பயணிகள் இதனை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து ஷேர் செய்து வருகின்றனர். இனி நம்ம ஊர் சென்னையை போற்றுவோம் என்பதுபோல் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.

மற்ற செய்திகள்
