நடுரோட்டில் 'குவிந்து' கிடந்த பணம்...! 'யாரும் கிட்ட போகாம தள்ளி நின்னு வேடிக்கை பார்த்த மக்கள்...' - என்ன நடந்தது...?
முகப்பு > செய்திகள் > தமிழகம்உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் ஊராட்சித் துணைத் தலைவருக்கான போட்டியில், வெற்றிபெற்ற ஊராட்சி உறுப்பினர்கள் களமிறங்கி உள்ளனர்.

ஊராட்சிகளில் துணைத் தலைவருக்கான போட்டி அதிகமாக இருப்பதால் வெற்றிபெற்ற உறுப்பினர்களை இழுக்க பண பேரம் பேசுதல் தற்போது வெளிப்படையாக நடக்க தொடங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நன்னாவரம் ஊராட்சி மன்றத் தலைவராக கலியமூர்த்தி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். 9 வார்டுகளைக் கொண்ட இந்த ஊராட்சியில் துணைத் தலைவருக்கான போட்டியில் ஆறுமுகம் மற்றும் சந்திரபாபு ஆகியோருக்கு இடையே போட்டி உருவாகியுள்ளது.
ஆகவே, இதில் ஒருவரைத் தான் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கவேண்டும் என, சக உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். போட்டி பலமாக உள்ளதால் இவரும் எதையாவது கொடுத்து பதவியைப் பிடித்துவிடவேண்டும் என்ற ஆசையில், செலவுகளை வெள்ளம் போல் அள்ளி வீசி வருகின்றனர்.
இந்த நிலையில் சக போட்டியாளரிடம் ஒரு உறுப்பினர் பணம் வாங்கியதை அறிந்த மற்றொரு போட்டியாளர், பணம் வாங்கியவரிடம் ஏன் இரண்டு தரப்பிடையும் பணம் வாங்க வேண்டும் என கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் நொந்த அவர் உடனடியாக அந்த பணத்தை, உரியவரிடமே கொண்டு சேர்க்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் பணம் கொடுத்தவரோ அதை வாங்க மறுத்து, கொடுத்தது கொடுத்ததாக இருக்கட்டும், வேண்டாம் என கூறியுள்ளார். அந்த பணத்தை திருப்பி கொண்டு வர மனத்தடை இருந்ததால், கொடுத்தவரின் வீட்டு முன்பு பணத்தை வீதியில் வீசியெறிந்துவிட்டு, வீடு திரும்பியுள்ளார்.
அந்த பணம் வீதியில் கிடக்க அப்பகுதி மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டு அதை யாரும் எடுக்காமல் கடந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. சிறிய பதவிக்கே இந்த நிலைமையா என மக்கள் மனம் குமுறுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
