'போர் வந்துவிட்டது... ரஜினியும் வந்துவிட்டார்!.. மகுடம் சூடுவாரா'?.. ஆன்மீக அரசியல்... சிறப்பு தொகுப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரசிகர்களின் நீண்ட நெடிய காத்திருப்புக்கு பின், தனது அரசியல் பிரவேசத்தை இன்று உறுதி செய்திருக்கிறார், நடிகர் ரஜினிகாந்த்.
பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக தன்னுடைய வாழ்க்கையத் தொடங்கிய ஒரு இளைஞர், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து, தற்போது அரசியல் களத்திற்கு வந்தது எப்படி?.. விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் என்ற நடிகர், தமிழ்நாட்டின் முகவரியாக மாறிக் கொண்டிருந்த காலம் அது.
1987 ஆண்டு இதே டிசம்பர் மாதம், தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மறைந்தார். அவரது மறைவு தமிழக அரசியலிலும், தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது. கால ஓட்டத்தில் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக ஜெ.ஜெயலலிதா உருவெடுத்தார்.
அதே நேரத்தில் தமிழ் சினிமா தன்னுடைய உச்ச நட்சத்திரத்தின் வெற்றிடத்தை நிரப்ப ஒரு ஆளுமையை தேடிக் கொண்டிருந்தது. அப்போது தான் தமிழக மக்கள், எம்.ஜி.ஆர்-இன் திரை வாரிசாக ரஜினிகாந்தை பார்க்கத் தொடங்கினர்.
உண்மையில், ரஜினியின் அரசியல் அத்தியாயம் அப்போதே ஆரம்பித்துவிட்டது.
ரஜினியின் அரசியல் பயணத்தை பற்றி விவாதிக்கும் எவரும், 1996 ஆம் ஆண்டைத் தான் மேற்கோள் காட்டுவர். ஆனால், ரஜினியின் அரசியல் முகம் முதலில் வெளிப்பட்ட ஆண்டு 1993.
அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, காவிரி பிரச்னைக்காக சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். அவரை நேரில் சந்தித்த ரஜினிகாந்த், தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.
ஆனால், அதன் பின்னர் நடந்த பல்வேறு சம்பவங்களால், அதிமுக-வுடன் மோதல் போக்கை கடைபிடித்தார் ரஜினிகாந்த். ஜெயலலிதாவை வெளிப்படையாகவே தாக்கி பேசினார்.
அந்த மோதலின் உச்சகட்டமாக, 1996 சட்டமன்ற தேர்தலின் போது, "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என்று முழங்கினார். அதாவது, எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசை, எம்.ஜி.ஆரின் திரை வாரிசான ரஜினிகாந்த் கடுமையாக விமர்சித்தார்.
அதுமட்டுமின்றி அந்த தேர்தலில், திமுக-தமாகா கூட்டணிக்கு ஆதரவும் தெரிவித்தார். ரஜினியின் ரசிகர்கள் இன்றும் சிலாகித்து கூறும் தேர்தல் அது. அந்த தேர்தலில் ரஜினி நேரடியாக களம் கண்டிருந்தால், அவர் முதல்வர் ஆகியிருக்கக்கூடும் என்று அவருடைய ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
"மரம் சும்மா இருந்தாலும், காற்று விடுவதில்லை" என்பது போல ரஜினி அரசியல் கருத்துகளை பேசாமல் இருந்தாலும், காவிரி பிரச்னை எழும்போதெல்லாம் அவரை நோக்கி கேள்வி கணைகள் வீசப்படுகின்றன.
கடந்த 2002 ஆம் ஆண்டு, காவிரி பிரச்னைக்கு தீர்வு காண மக்கள் இயக்கத்தை தொடங்க இருப்பதாக கூறிய ரஜினிகாந்த், நதிநீர் இணைப்பு திட்டத்துக்காக 1 கோடி ரூபாய் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு தமிழகத்தில் காவிரி சர்ச்சை தலைதூக்கும் போதெல்லாம், ரஜினிக்கு அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும்.
அதன் நீட்சியாக, 2004 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் மிக முக்கியமானது. தே.ஜ.கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நதிநீர் இணைப்பை நிறைவேற்றுவதாக குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தினார்.
ஆனால், அந்த தேர்தலில் பாஜக மத்தியில் ஆட்சியை இழந்ததோடு, தமிழகத்திலும் படுதோல்வியை சந்தித்தது. ரஜினியின் அரசியலை விமர்சனம் செய்பவர்கள், இந்த தேர்தலை மேற்கோள் காட்டுவர். 1996 சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி ஆட்சியை பிடித்ததற்கு ரஜினியின் ஆதரவும் ஒரு காரணம், அது மட்டுமே காரணம் அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ரஜினியின் அரசியல் அத்தியாயத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு. அப்போது திமுக தலைவர் கருணாநிதியும் நேரடி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். தமிழகத்தை வழிநடத்த மிகப்பெரிய ஆளுமை தேவைப்பட்டது. தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவானது.
ஆட்சி அதிகாரத்தில் காட்சிகள் மாறத் தொடங்கின. எடப்பாடி பழனிசாமி அப்போது தான் முதல்வர் நாற்காலியின் வெப்பத்தை உணர்ந்து கொண்டிருந்தார். எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் எடப்பாடியின் ஆட்சியைக் கவிழ்க்க வியூகங்கள் வகுத்துக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், அம்மாத இறுதியில், தமிழக அரசியல் குறித்து அதிரடி கருத்துகளை தெரிவித்து, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், 234 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் கூறி அரசியல் அரங்கை அதிரவைத்தார்.
அதுமட்டுமின்றி, "போர் வரும்போது பாத்துகலாம், தமிழகத்தில் ஆன்மீக அரசியலை ஏற்படுத்த விரும்புகிறேன்" என்று சொன்னதும், உள்ளூர் ஊடகங்கள் முதல் தேசிய அரசியல் வரை விவாதங்கள் அனல் பறந்தன.
அதையடுத்து, தன்னுடைய ரசிகர் மன்றத்தை உடனடியாக மக்கள் மன்றமாக மாற்றி உத்தரவிட்டார்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் உறுதி செய்யப்பட்ட பின், ஒரு தனியார் கல்லூரி விழாவில் பேசிய அவர், "நான் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியைக் கொடுக்க விரும்புகிறேன்; எம்.ஜி.ஆர்-ஐ போல ஏழைகளுக்கான, சாமானிய மக்களுக்கான ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்" என்று ஆவேசமாகப் பேசினார்.
அந்த நொடி முதல், தமிழகம் மற்றும் தேசிய அரசியலில் நடக்கும் ஒவ்வொரு அசைவுக்கும் அவரது நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. அப்படி அவர் கருத்து கூறும் பட்சத்தில், விமர்சனங்களும் அவரை விடாமல் விரட்டுகின்றன.
பணமதிப்பிழப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம், எட்டு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துகளுக்கு அவரை அரசியல் விமர்சகர்கள் கடுமையாக சாடுகின்றனர்.
உதாரணமாக, பணமதிப்பிழப்பை முதலில் வரவேற்ற அவர், பின்னாளில் "அதை மத்திய அரசு செயல்படுத்திய விதம் தவறு" என்று கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முதலில் காவல்துறையையும், தமிழக அரசையும் குற்றம்சாட்டிய அவர், பின்பு சமூக விரோதிகளால் தான் வன்முறை ஏற்பட்டது என்று தெரிவித்தார்.
இப்படி அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒரே சமயத்தில் கருத்து தெரிவிப்பதற்காகவே, அவரை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தனக்கு முதல்வர் பதவியில் ஆசை இல்லை என்றும், மக்களிடையே எழுச்சி ஏற்பட்டு, அதை தான் கண்ணால் பார்த்த பிறகு அரசியலுக்கு வருகிறேன் என்றும் உணர்ச்சி பொங்க பேசினார்.
இதன் காரணமாக, அவர் அரசியலுக்கு வர மாட்டார் என பரவலாக பேசப்பட்டது.
பின்னர், கொரோனா லாக்டவுன் காலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் படுகொலை, கறுப்பர் கூட்டத்தின் கந்த சஷ்டி சர்ச்சை என அடுத்தடுத்த சமூக அவலங்களை குறித்து கருத்து தெரிவித்து, மீண்டும் அரசியலில் பேசுபொருளாக மாறினார்.
இத்தகைய சூழலில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நவம்பர் 30 அன்று சந்தித்த அவர், அரசியல் கட்சி நிலைப்பாடு குறித்து ஓரிரு தினங்களில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று (டிசம்பர் 3, 2020) அறிவித்துவிட்டார். ஜனவரியில் கட்சி தொடங்கப் போகிறார். தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகள் மாறப்போகின்றன. திமுக, அதிமுக என்று இருதுருவமாக இருந்த அரசியல் களம், ரஜினியின் வருகையால் எத்தகைய தாக்கத்தை எதிர்கொள்ளப்போகிறது? நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்று மாற்று அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள், ஆன்மீக அரசியலை எப்படி அணுகும்?
அவர் சொன்னது போலவே போர் வந்துவிட்டது. ரஜினி மகுடம் சூடுவாரா?..
காத்திருப்போம்...