'ராமருக்கு அணில் போல இருப்பேன்...' 'இன்னைக்கு தான் உண்மையான தீபாவளி...' - தமிழருவி மணியன் பேச்சு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன் போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தின் முன் கட்சி தொடங்குவது குறித்து அறிவித்திருந்தார்.

வரும் 2021ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்குபெறுவதாக தெரிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று ரஜினி, போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தின் முன் கட்சி தொடங்குவது குறித்து அறிவித்தார். அதுமட்டுமில்லாமல், தமிழருவி மணியனைத் தனது பணிக்கான மேற்பார்வையாளராக நியமித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி குருதி அறிவித்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழருவி மணியன், தன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையிலும், மருத்துவர்கள் கொடுத்திருக்கிற எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு மக்கள் நலனுக்காக, மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என ரஜினி இன்று ஒரு மிகப்பெரிய வேள்வியில் இறங்கியிருக்கிறார் எனக்கூறினார்.
மேலும், தனக்கு புகழும், பெருமையும் தேடித்தந்த தமிழக மக்களுக்கு தன்னால் இயன்ற வகையில் நன்றிக் கடன் ஆற்றவேண்டும் என்பதுதான் ரஜினியின் பெருவிருப்பமாக உள்ளது. அந்த விருப்பத்தின் அடிப்படையில்தான் இன்று அரசியல் கட்சி குறித்து அவர் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பயணம் அன்பு சார்ந்து, அன்பை ஆதர்சமாகக் கொண்டு, சாதி மதப் பேதமற்று, அனைவரையும் அன்பினால் ஆரத் தழுவுகின்ற ஆன்மிக அரசியலை அவர் இன்றைக்கு அரங்கேற்றுகிறார். இது தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ஒரு புதிய திசையைக் காட்டக்கூடியதாக இந்த ஆன்மிக அரசியல் அமையும்.
உயிருக்கும் மேலாக அவரைப் போற்றி மகிழக்கூடிய ரசிகப் பெருமக்களுக்கும், ஊழலற்ற, நேரிய ஆட்சியைத் தர இவர் ஒருவரால் மட்டுமே முடியும் என்று நம்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற லட்சக்கணக்கான வாக்காளப் பெருமக்களுக்கும் இன்றுதான் உண்மையான தீபாவளித் திருநாள். ஊழலற்ற வெளிப்படைத் தன்மைமிக்க மிகச்சிறந்த நிர்வாகத்தைச் சந்திக்க வேண்டும் என்றால் அதைத் தருவதற்கு ரஜினி மட்டுமே இருக்கிறார்' எனக்கூறினார்.
கூடுதலாக ரஜினியின் இந்த அற்புதமான வேள்வியில் என்னை முற்றாக ஈடுபடுத்திக் கொண்டு, ராமருக்கு அணில் போல என்னால் ஆன அனைத்தையும் செய்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
