‘பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட’... ‘அத்தியாவசிய பொருட்கள் கடைகளும் மூடப்படுகிறதா?... ‘சென்னை மாநகராட்சி ஆணையர் வார்னிங்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி மளிகை, உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளை அடைப்பதாகவும், அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் பால், காய்கறிகள், பழங்கள், மளிகை விற்பனை செய்யும் சிறு வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும். இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளும் தொடர்ந்து செயல்படும். கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். கடைகள் மூடப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய வணிக நிறுவனங்களை மட்டுமே மூட உத்தரவு. சிறிய கடைகளுக்கு அல்ல. சென்னையில் மால்கள், சினிமா தியேட்டர்களை மட்டுமே மூடியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதியே பெரிய வணிக நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நமது முக்கியக் குறிக்கோள் வைரஸ் பரவலைத் தடுப்பது மட்டுமே. சாதாரண பொதுமக்களைப் பாதிக்கும் நடவடிக்கை அல்ல. இந்த இக்கட்டான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்டுவோம்" இவ்வாறு சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.