'கொரோனா' வைரஸை சாக்கா வச்சு யாராவது இப்படி செஞ்சீங்க'... தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 17, 2020 10:13 AM

கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை பயன்படுத்தி முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து புகார் அளிக்க தமிழக அரசு தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது.

TN Government warned Pharmacies against selling face masks above MRP

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களிடையே பரவலாக உள்ளது. இதனால் மக்கள் முகக்கவசம் மற்றும் சானிடைசர், திரவ சோப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு மக்களிடையே தேவை அதிகரித்து உள்ளது. இதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அந்த பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க, அரசு தீவிர முயற்சியை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பாக மக்கள் பயணம் செய்யும் பொழுது விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் என பொதுவாக மக்கள் கூடும் இடங்களில் நோய் தாக்கத்தினை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிந்து வருகின்றனர். நோயின் தொற்றினை தவிர்க்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் சுகாதார அறிவுரைகளை செல்போன் மூலமாக விளம்பரம் செய்து அடிக்கடி கைகளை சோப்பு, திரவ வடிவிலான சோப், சானிடைசர் போன்றவைகளை கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தி வருகின்றன.

இதன் காரணமாக இந்த பொருட்கள் சந்தையில் அதிக தேவை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு சில விற்பனையாளர்கள் இந்த பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. விதிமுறைகளை மீறி விற்பனை விலைக்கு அதிகமாக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் மேற்கண்ட பொருட்களில் குறிப்பிட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள், கடைகள், மருந்து கடைகள் போன்றவை குறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறையினரால் நுகர்வோர் நலன் கருதி செயல்பட்டு வரும் TN-L-M-C-TS என்ற செல்போன் ஆப்-ஐ டவுன்லோடு செய்து புகார் தெரிவிக்கலாம். அல்லது 044-24321438 என்ற தொலைபேசி வாயிலாகவோ புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags : #CHENNAI #CORONAVIRUS #COVID-19 #PHARMACIES #FACE MASK