'பிரியாணி கடையில் பெண்ணை கிண்டல் செய்த இளைஞர்'... 'தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 21, 2019 02:49 PM
திருச்சி அருகே பிரியாணி கடையில் பெண் ஒருவரை கிண்டல் செய்தவரை, தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார் கோவில் அடுத்த முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அப்துல்லா. இவருக்கு தஸ்வின் பானு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் அப்துல்லா, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ஒரு வீட்டின் நிகழ்ச்சிக்காக சிலரை சவாரி ஏற்றிக்கொண்டு திருவானைக்காவல் அருகே உள்ள ஒரு மண்டபத்திற்கு சென்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மண்டபம் அருகில் இருந்த கடையில், பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது. பிரியாணி தீர்ந்துவிட்டதால், நிகழ்ச்சியை நடத்தியவர்களின், உறவுக்கார பெண் ஒருவரும், ஆட்டோ ஓட்டுநர் அப்துல்லா மற்றும் அவரது நண்பர் முஸ்தபாவும் பிரியாணி வாங்க அந்தக் கடைக்கு சென்றனர். அங்கிருந்த கடை ஊழியர்களிடம் ஆர்டர் கொடுத்த அளவைவிட, குறைவான பிரியாணி பொட்டலங்களே இருந்ததாக அந்தப் பெண் கடை மேனேஜரிடம் கேட்டுள்ளார்.
அப்போது மதுபோதையில் கடையில் இருந்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் பிரியாணி கடைக்கு ஆதரவாக பேசி, கிண்டல் செய்ததாகத் தெரிகிறது. இதனால் அந்தப் பெண்ணுக்கும் நாகராஜூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை ஆட்டோ ஓட்டுநர் அப்துல்லா தட்டி கேட்டதாகக் கூறப்படுகிறது. நாகராஜூம், அப்துல்லாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெளியே சென்ற நாகராஜ், தனது நண்பர்கள் தயாளன் என்ற ஸ்ரீராம், முன்னா,கோகுல்நாத் என்ற பாரதி ஆகியோரை அழைத்து வந்து, அப்துல்லாவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
இதில் அப்துல்லா மயங்கி விழுந்தார். உடனே 4 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிவிட்டனர். அடிபட்டு கிடந்த அப்துல்லாவை, அவரது நண்பர் முஸ்தபா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது முதலில் கீழே விழுந்ததால் காயம்பட்டதாக மருத்துவரிடம் கூறும்படி முஸ்தபாவிடம், அப்துல்லா கூறியுள்ளார். இதனால் மருத்துவர்கள் உரிய சிகிச்சையை உடனே அளிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
ஆனால் 4 பேரும் நெஞ்சில் மிதித்ததால் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அப்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரியாணி கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை பார்த்தபோது, அதில் நாகராஜூம் அவரது நண்பர்களும் அப்துல்லாவை அடித்து உதைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதன்படி நாகராஜ் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
