தமிழ்நாட்டையே உலுக்கிய... '4 மணி நேர சம்பவம்'...'தீரன் பட பாணியில் புகுந்த வட நாட்டு கொள்ளையர்கள்'... 'தெறித்த தோட்டாக்கள்'... போலீசார் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீர்காழி அருகே நடந்த தங்க நகை கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் 50 வயதான தன்ராஜ் செளத்ரி.
இவர் சீர்காழி அடுத்துள்ள தர்மகுளம் பகுதியில் நகை கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார். தன்ராஜ், தன் மனைவி ஆஷா, மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில், தன்ராஜ் சௌத்ரியின் வீட்டுக் கதவை சில மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். அவர்கள் இந்தியில் பேசியதை, கேட்ட தன்ராஜ் கதவைத் திறந்துள்ளார்.
உடனடியாக, தன்ராஜை தாக்கிய ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து ஆஷா அவரது மகன் அகில் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த மருமகள் நிகிலையும் மர்ம கும்பல் தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதையடுத்து, மர்ம கும்பல் வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்ட்டிஸ்க், சி.டி ஆகியவற்றையும் கொள்ளை அடித்துக்கொண்டு தன்ராஜ் சௌத்ரியின் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சீர்காழி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். படுகாயமடைந்த தன்ராஜ் செளத்ரி அவரது மருமகள் நிகில் இருவரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
காலை 6 மணிக்கு வீட்டிற்குள் புகுந்து, அரிவாளால் வெட்டி நகை கொள்ளையடிக்கப்பட்டு உரிமையாளரின் காரிலேயே தப்பித்து சென்ற இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சீர்காழியில் இரட்டை கொலை செய்து 16 கிலோ நகையோடு தப்பி சென்ற கொள்ளையர்களை 4 மணி நேரத்தில் அதிரடியாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சீர்காழி அருகே எருக்கூர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த வட இந்திய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட 16 கிலோ நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 3 பேரில், இரண்டு பேரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும், அதில் ஒரு நபரை கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து கைப்பற்ற அழைத்து சென்ற போது, அந்த நபர் தப்பிக்க முயற்சி செய்ததால் காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
