'நாங்க புதுசா கல்யாணமான ஜோடி'... 'அதான் அப்படி செஞ்சிட்டேன், SORRY'... 'ஒரு நிமிடம் அதிர்ந்துபோன பாதுகாப்பு படையினர்'... பரபரப்பை கிளப்பிய இளம்பெண்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உயர் பாதுகாப்பு மிக்க சென்னை விமான நிலையத்தில், கணவரை வழியனுப்ப வந்த இளம்பெண் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சர்வதேச விமானநிலையத்திலிருந்து இன்று சாா்ஜா செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் டிக்கெட் மற்றும் ஆவணங்களைப் பரிசோதித்து விமானநிலையத்தின் உள்பகுதிக்குள் மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அந்த நேரம் ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த நவாஸ் சேக் என்பவரும், அவருடைய மனைவி சனா என்பவரும் பயணிகளுக்கான இ டிக்கெட்டை காட்டிவிட்டு உள்ளே சென்றனர்.
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து இளம்பெண் சனா மட்டும் வெளியே வந்தார். இதை கவனித்த கேட்டில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், சனாவை நிறுத்தி என்னவென்று விசாரித்தார்கள். அப்போது அவர், தான் பயணத்தை ரத்து செய்து விட்டதாகவும் எனது கணவர் மட்டுமே பயணிக்கின்றார் என்று கூறினார்.அதோடு உள்ளே போகும்போது கேட்டில் காட்டிவிட்டு சென்ற இ டிக்கெட்டையும் காட்டினார். ஆனால் அந்த டிக்கெட்டில் பயணி ஆப்லோடு செய்யப்பட்டதற்கான எந்த முத்திரையும் குத்தப்படவில்லை.
இது மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அவர்களுக்குச் சற்று பதற்றத்தையும் ஏற்படுத்தியது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இளம் பெண்ணை வெளியில் விடாமல் நிறுத்திவைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தான் நடந்த அனைத்தையும் அந்த பெண் புட்டு புட்டு வைத்தார். அதில், ''நாங்கள் இருவரும் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியர். இந்த சூழ்நிலையில் எனது கணவர் சாா்ஜாவில் வேலைக்காகச் செல்ல தயாரானார்.
இதனால் அவரை வழியனுப்ப நானும் அவருடன் சென்னை விமானநிலையம் வந்தேன். ஆனால் சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் கடைசி வரை சென்று கணவரை வழியனுப்ப வேண்டும் என எனக்கு ஆசையாக இருந்தது. அப்போது தான் எங்களுக்கு இந்த யோசனை தோன்றியது. அதாவது நாங்கள் எனது கணவரின் உண்மையான டிக்கெட்டை கலா் ஜெராக்ஸ் எடுத்து அந்த ஜெராக்ஸ் டிக்கெட்டில் எனது பெயரையும் இணைத்து போலியான இ டிக்கெட் தயார் செய்து கொண்டுவந்திருந்தோம்.
அந்த போலி இ டிக்கெட்டை காட்டிதான் விமானநிலையத்திற்குள் பாதுகாப்பு சோதனை நடக்கும் பகுதி வரை ஒன்றாகவே சென்றோம். அதன்பின்பு நானும் கணவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தோம். பின்பு அவர் தனது உண்மையான டிக்கெட் மூலம் விமானத்தில் சாா்ஜாவிற்கு புறப்பட்டு சென்றாா். நானும் அவரை வழியனுப்பி விட்டு அதே போலி இ டிக்கெட் மூலம் வெளியே வந்தேன். நான் செய்தது தவறு தான். மன்னித்துவிட்டுவிடுங்கள்'' என்று அழுது கெஞ்சினார்.
ஆனால் உயர் பாதுகாப்பு கொண்ட சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்த மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே அந்த இளம் பெண்ணை கைது செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், அவரை சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசாா் இளம் பெண்ணிடம் மேலும் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஆந்திரா இளம் தம்பதி கலா் ஜெராக்ஸ் மற்றும் போலி இ டிக்கெட் எடுத்த இண்டா்நெட் மையம் எது?, இவர்கள் இதற்கு முன்பு இதைப்போல் போலி டிக்கெட் தயாரித்துள்ளனரா? இந்த மோசடிக்கு இவர்கள் மட்டும் தான் காரணமா?அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா?என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர்.

மற்ற செய்திகள்
