'நான் தான் சுடலை மாடன் வந்திருக்கேன் டா'... 'பைப் கனெக்சனுக்காக நடந்த தகராறு'... சாமியை விரட்ட போலீசார் செஞ்ச சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு கைலாசபுரம் என்னும் பகுதியில் டியூப் மூலம் வீடுதோறும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக புதிய இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
வீட்டிற்கு தலா 1500 ரூபாய் வாங்கிக் கொண்டு சொந்த வீடு உள்ள நபர்களுக்கு இந்த குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், பக்கத்து வீட்டுக்காரருடன் இருந்த முன் பகையால், அங்கிருந்த மூதாட்டி ஒருவர் தனது வீட்டின் வழியாக அந்த பக்கத்து வீட்டுக்காரருக்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்பதை எதிர்த்து பணிகளைத் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து, போலீசார் சிலர் அந்த மூதாட்டியிடம் சமாதானம் பேச முயன்றுள்ளனர். மறுகணமே, முடியை விரித்து தலைவிரி கோலத்துடன் சாமியாட ஆரம்பித்துள்ளார் மூதாட்டி. தான் சுடலை மாடன் என்றும், தனது நிலத்தில் கால் வைத்தால் தூக்கி விடுவேன் என்றும் கூறி அவர் ஆக்ரோஷமடைந்துள்ளார். இதனால், அவரது நிலப்பகுதியில் நுழையாமல் போலீசார் வெளியிலேயே தயக்கத்துடன் காத்திருந்தனர்.
அதன் பின்னர் உதவி ஆய்வாளர், மூதாட்டியின் பணப்பை கீழே விழுந்ததாக கூறியதால் அவரின் சாமியாடல் மெல்ல மெல்ல தணிய ஆரம்பித்தது. அதன் பிறகு அங்கிருந்த பெண் ஒருவர், மூதாட்டியை அழைத்துச் சென்று வேப்பமரம் ஒன்றின் அடியில் உட்கார வைத்தார். இதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் குடிநீர் இணைப்பு பெற போலீசார் அறிவுறுத்தினர். அதன் பின்னரே அப்பகுதியில் டியூப் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
பக்கத்து மாநிலங்களுடன் தண்ணீருக்காக பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், முன்பகை காரணமாக பக்கத்துக்கு வீட்டாருக்கே தண்ணீர் இணைப்பை கொடுக்க இத்தனை பாடுபட வேண்டியுள்ளது.