ஒரே நாளில் '884 பேர்' பலி... '5 ஆயிரத்தை' தாண்டிய 'உயிரிழப்பு'... அதிபர் 'ட்ரம்ப்' வெளியிட்டுள்ள 'புதிய' அறிவிப்பு...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்முலம் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,110 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு புதன்கிழமை நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.15 லட்சமாகும்.
இதுகுறித்துப் பேட்டி அளித்துள்ள அதிபர் ட்ரம்ப், "கொரோனா வைரஸுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து போராடி வெற்றி பெறும். எங்கள் கணிப்புப்படி அமெரிக்காவில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் மக்கள் வரை கொரோனாவால் உயிரிழக்கக்கூடும். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தான் எடுத்து வருகிறோம். சமூக விலகல் தான் இந்த வைரஸை ஒழிக்க சிறந்த வழி என்பதால், அனைத்துப் பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும், சுற்றுலாத் தளங்களும் வேறுவழியின்றி மூடப்பட்டுள்ளன.
மற்ற நாடுகளைப் போன்று நாடு முழுவதும் லாக் டவுன் கொண்டுவர விரும்பவில்லை. ஒவ்வொரு மாநிலமும் அதற்கான முடிவை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. மக்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பதை தடை செய்துள்ளோம். அமெரிக்க மக்கள் அனைவரும் அடுத்த 30 நாட்களுக்கு சமூக விலகலை கட்டாயமாகப் பின்பற்றுவது அவசியம். உள்நாட்டு விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, நியூயார்க், டெட்ராய்ட் ஆகியவற்றுக்கு இடையே விமானப் போக்குவரத்து இருக்கிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உள்நாட்டு விமானப் போக்குவரத்தை குறைக்கவும், குறிப்பாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை நிறுத்தவும், அனைத்து உள்நாட்டு விமான சேவையையும் தற்காலிகமாக ரத்து செய்யவும் ஆலோசித்து வருகிறோம். அத்துடன் ரயில் போக்குவரத்திலும் சில கட்டுப்பாடுகளை கொண்டுவர இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.