'பிரிந்து சென்ற பெற்றோர்'...'4 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்'... நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 16, 2019 10:43 AM

4 வயது சிறுவன் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Four years old boy brutally murdered in Theni

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு ஹரிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இதனிடையே கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்த முருகன், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு மறவபட்டி பகுதியில் குடியேறியுள்ளார். கீதாவும் தேவாரம் பகுதியைச் சேர்ந்த உதயன் என்ற நபரை  திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கீதாவின் பெற்றோர் வீட்டின் அருகிலேயே வசித்து வந்தார்கள்.

இதனிடையே பெற்றோர் இருவரும் வெவ்வேறு திருமணம் செய்து கொண்டதால் தவித்த சிறுவன் ஹரிஷை கீதாவின் தந்தை மற்றும் அவரது சகோதரி ராஜராஜேஸ்வரி வளர்த்து வந்துள்ளனர். ஒன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுவன், பெற்றோர் வீடு அருகிலேயே இருந்ததால் அவ்வப்போது இருவரது வீட்டிலும் தங்கி வந்துள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சிறுவன் ஹரிஷ் வீட்டின் அருகில் இருந்த தெருவில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவன் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த அவனது சித்தி ராஜராஜேஸ்வரி தெரு முழுவதும் தேடியுள்ளார்.

இதையடுத்து அவர் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் இரவு முழுவதும் தேடியும் சிறுவன் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். இதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுவனை பல இடங்களில் தேடினார்கள். இந்நிலையில் கோம்பை பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் முகம் முழுவதும் கற்களால் தாக்கப்பட்டு சிறுவன் ஒருவன் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அப்போது தான் இறந்து கிடந்த சிறுவன் காணாமல் போன ஹரிஷ் என்பது தெரியவந்தது. காணாமல் போன சிறுவன், கொடூரமாக அடித்து கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : #MURDER #THENI #BOY #BRUTALLY