'நான் பைக் திருடல, என் ஃப்ரண்ட் தான் திருடினான்...' 'நீ எடுத்துருந்தா கொடுத்துருப்பா...' 'சரி நீ எங்க வீட்டுக்கு வா...' 4 பேர் சேர்ந்து செய்த கொடூர கொலை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 14, 2020 05:49 PM

கல்லூரி இளைஞர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை திருடிய நபரை இன்ஸ்டாகிராம் போட்டோ மூலம் கண்டுபிடித்து, அடித்தே கொன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

four teenagers who killed a friend of a bike thief

எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் பி.ஏபடித்து வரும் ராமச்சந்திரன்(20) என்னும் இளைஞர் கே.கே நகரில் உள்ள கன்னிகாபுரம் 14வது செக்டாரை சேர்ந்தவர். இவருடைய கே.டி.எம் என்னும் விலையுயர்ந்த பைக் கடந்த பிப்ரவரி மாதம் திருட்டு போயுள்ளது. இதற்கடுத்து உடனடியாக கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் போலீசாரும் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

தான் ஆசையாக வாங்கிய பைக்கை கண்டுபிடிக்க ராமச்சந்திரன் கல்லூரி வாட்ஸப் குழு, ஏரியா நண்பர்கள் வாட்ஸப் குழு மற்றும் தன்னுடைய போனில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பைக் காணாமல் போன விவரத்தையும், பைக் பற்றி விவரத்தையும் பதிவிட்டு நண்பர்களின் உதவியை நாடியுள்ளார்.

இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தமிழ்ச்செல்வன் என்பவர் கே.டி.எம் பைக் மீது அமர்ந்த போட்டோவை பதிவேற்றம் செய்துள்ளார் . இதை பார்த்த ராமச்சந்திரனின் கல்லூரி நண்பர் இது ராமசந்திரன் குழுவில் பகிர்ந்த திருடப்பட்ட பைக் போலவே இருப்பதாக சந்தேகமடைந்து தனது நண்பரிடம் இது பற்றி கூறியுள்ளார். மேலும் போட்டோ பதிவேற்றம் செய்த பகுதி காட்டுப்பாக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு கோபமடைந்த ராமசந்திரன் இரு தினங்களுக்கு முன்பு, தனது நண்பர்களை அழைத்து கொண்டு காட்டுப்பாக்கத்தில் இருக்கும் தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு சென்று, அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து அடித்து போட்டோவில் இருக்கும் பைக்கை பற்றி விசாரித்துள்ளார் ராமச்சந்திரன்.

வலியால் துடித்த தமிழ்ச்செல்வன் இந்த பைக் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும், இது தனது நண்பன் ஆகாஷிடம் பைக் வாங்கி அதில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் போட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதையடுத்து, நேற்று மாலை ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் அபிஷேக் (20), சந்தோஷ்குமார் (20), தீனா (20) ஆகியோர் ஆகாஷின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்த ஆகாஷை பார்த்த அவர்கள், ஆகாஷின் பெற்றோரிடம் பைக் காணாமல் போன சம்பவத்தை சொல்லி, ஆகாஷிடம் இருந்து அதனை பெற்றுத் தருமாறு கூறியுள்ளனர். ஆகாஷின் பெற்றோரும் இரு சக்கரவாகனத்தை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வருமாறும் கூறியுள்ளனர். அதையடுத்து ராமச்சந்திரன் ஆகாஷை கே.கே.நகரில் இருக்கும் அவரது வீட்டிற்கு அழைத்து வந்து அடிகொடுத்துள்ளார்.

ராமசந்திரன் ஆகாஷிடம் இந்த பைக் எப்படி கிடைத்தது என விசாரிக்க, தனது நண்பன் விக்கி என்பவர் தான் திருடி உள்ளார் எனவும், விக்கி தான் திருடிய இருசக்கர வாகனத்தை ஆகாஷிடம் கொடுத்து வைத்து இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த இருசக்கர வாகனத்தின் சில பாகங்களை விக்கி கழற்றி விற்றுவிட்டதாக கூறியுள்ளார் ஆகாஷ். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ராமசந்திரன் கண்முன் தெரியாமல் ஆகாஷை அடித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார் ஆகாஷ்.

மேலும் ராமசந்திரன் வீட்டின் அருகில் உள்ளோர் இவர்களின் வீட்டிலிருந்து வெவ்வேறு சத்தம் வருவதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆகாஷை சோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் ராமசந்திரன் மற்றும் அவரின் நண்பர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு தலைமறைவாக உள்ள காட்டுபாக்கத்தைச் சேர்ந்த விக்கியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

ஆகாஷின் உதலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கே .கே நகர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, ஆகாஷின் பெற்றோரை தீரா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #BIKE