'நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்'... 'முதல்வர் வேட்பாளர் விவகாரம்'... பாஜகவின் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுக, பாஜக கூட்டணியின் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன. அப்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை யார் எனச் சர்ச்சை எழுந்தது. அதிமுகதான் தமிழகத்தில் பெரிய கட்சி என்பதால் அதிமுகவே கூட்டணிக்குத் தலைமை என ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அமித்ஷா சென்னை வந்தபோது, பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும் என ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்தனர். இருப்பினும் அமித்ஷா அதுகுறித்து எதுவும் பேசாமல் சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜகதான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் எனப் பகிரங்கமாக அறிவித்தார்.
மேலும் தேர்தலுக்குப் பின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என பாஜக தலைவர்கள் ஆங்காங்கே பேசி வந்தனர். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் குஷ்பு உட்படப் பலரும் பேசினர். இதனை அதிமுக தலைவர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி விமர்சித்தார்.
இந்நிலையில் திருச்சியில் பேட்டி அளித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, முதல்வர் வேட்பாளரை அதிமுகவே முடிவு செய்யும் எனத் தெரிவித்தார். கூட்டணியில் அதிமுக மேஜர் பார்ட்னர். அவர்கள் முடிவெடுப்பதை மைனர் பார்ட்னரான பாஜக ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை பாஜக ஏற்றுக்கொள்கிறது எனத் தெரியவந்துள்ளது. இதனால் முதல்வர் வேட்பாளர் குறித்து நிலவி வந்த சலசலப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

மற்ற செய்திகள்
