'9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை'... 'மின்சார ரீடிங் எடுக்கச் சென்றபோது அத்துமீறல்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 16, 2019 06:38 PM
மின்சார ரீடிங் எடுக்கச் சென்ற போது, வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் அபிஷேகப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வீரய்யன். இவருடைய மகன் 26 வயதான வினோத் அரசு மின்துறை ஊழியர். இவருக்கு வீடு வீடாகச் சென்று மின்சார மீட்டரில் ரீடிங் கணக்கெடுத்து உபயோகிப்பாளர்களுக்கு, மின்கட்டண பில்போடும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாகூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்று வீடுகளில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் பணியில் வினோத் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, ஒரு வீட்டில் 4-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டார். இந்தநிலையில் அந்த சிறுமியிடம் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என வினோத் கேட்டுள்ளார். உடனே அந்த சிறுமியும் வீட்டுக்குள் தண்ணீர் எடுக்க சென்றாள். அப்போது, வினோத் வீட்டுக்குள் சென்று அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. இதில் அந்த சிறுமி பயந்து அலறி கூச்சல் போட்டார்.
சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு வினோத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அந்த சிறுமியை சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், பாகூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையைத் தொடர்ந்து மின்துறை ஊழியர் வினோத் மீது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் (போக்சோ) வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இதற்கிடையே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மின்துறை ஊழியரை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை பாகூர்- கரிக்கலாம்பாக்கம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், கிராம மக்கள் அதனை ஏற்கவில்லை. சம்பந்தப்பட்ட மின்துறை ஊழியரை கைது செய்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என கூறி தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மின்துறை ஊழியர் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்துவதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், அதனை பொதுமக்கள் நம்பவில்லை.
இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட வினோத்திடம் விசாரணை நடத்துவது குறித்து செல்போனில் காட்டினர். அதன் பிறகே பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். கைது செய்யப்பட்ட வினோத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
