கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை... பயிற்சியாளரின் மகன் கைது...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 04, 2019 06:51 PM

கபடி பயில வரும் கல்லூரி மாணவி ஒருவருக்கு, பயிற்சியாளரின் மகன் பாலியல் தொல்லைக் கொடுத்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

kabaddi coach son has been arrested for sexually harassing a student

கோவை ராஜவீதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், தனியார் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை வணிகவியல் பயின்று வருகிறார். கபடி வீராங்கனையான இவர், சுந்தராப்புரத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரிடம் மாலை நேரங்களில் இலவசமாக கபடி பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் விஸ்வநாதனின் மகன் சஞ்சீவ்குமார், அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியதோடு, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக  மிரட்டல் விடுத்ததாகவும், சஞ்சீவ்குமாருக்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருப்பதாகவும் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து பொது இடத்தில் கெட்ட வார்த்தையில் பேசுவது, கொலை மிரட்டல், பெண்ணை பாலியல் தொல்லைப்படுத்தும் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சஞ்சீவ்குமாரை கைது செய்தனர்.

இந்நிலையில் புகாரை திரும்பப் பெறக் கோரி, புகாரளித்த மாணவியின் வீட்டிற்கு சென்ற சஞ்சீவ்குமாரின் உறவினர்கள் தகராறு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மாணவி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Tags : #COIMBATORE #SEXUALHARASSMENT #KABADDI #STUDENT #ARRESSTED