'இனிமே நாங்க 'இத' செய்ய மாட்டோம்!'... உச்சபட்ச கோபத்தில் ட்ரம்ப்!... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > உலகம்உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகள் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அந்நிறுவனத்துக்கு இனிமேல் நிதி அளிக்க முடியாது எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தொடக்கத்தில், கொரோனாவின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வைரஸ் அசுர வேகத்தில் பரவத் தொடங்கியதும் சுகாதார நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் என்ற விஷயத்தை சீனா மறைத்துவிட்டதாகவும், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். உலக சுகாதார அமைப்பின் தாமதமான செயல்கள், உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறினார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய டிரம்ப், மீண்டும் உலக சுகாதார அமைப்பை கடுமையாக சாடி உள்ளார்.
'உலக சுகாதார அமைப்பு அமெரிக்காவிடமிருந்து ஏராளமான பணத்தைப் பெறுகிறது. பயணத் தடையை நான் விதித்த சமயத்தில், அவர்கள் விமர்சித்தனர். பயணத் தடைக்கு உடன்படவும் இல்லை. நிறைய விஷயங்களில் அவர்கள் தவறாகவே பேசியிருகிறார்கள். அவர்கள் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவே தோன்றுகிறது. உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நாங்கள் நிறுத்தப் போகிறோம்' என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும், உலக சுகாதார அமைப்பு சீனாவை மையமாகக் கொண்டதோ என்று தோன்றுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பிற்கான பெரும்பகுதி பணத்தை அமெரிக்கா செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
