"அதென்ன 5 T திட்டம்..." 'கொரோனாவுக்கு' எதிரான 'மாஸ்டர் பிளானுடன்...' 'களத்தில்' இறங்கிய 'கெஜ்ரிவால்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 08, 2020 01:54 PM

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் 5T திட்டத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிமுகப்படுத்தியுள்ளார்.

delhi cm arvind kejriwal announced 5t plan to stop the spread

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அதற்கு பிளான் 5T என பெயரிட்டுள்ளார்.

Testing. Tracing, Treatment, teamwork, tracking and monitoring என இந்த ஐந்து வழிமுறைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போரை வலிமைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

1 - பரிசோதனை(Testing)

முதலில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல் முக்கியமான விஷயமாகும், அதற்காக தீவிரமான, விரிவான பரிசோதனைகளை செய்வது அவசியமாகும். இதன் மூலம் மட்டுமே புதிதாக வைரஸ் பரவாமல் தடுக்கும் வழிமுறையை வகுக்க முடியும். இதற்காக தில்ஷாத் கார்டன், நிஸாமுதீன் போன்ற ஹாட்ஸ்பாட் பகுதிகளில் ஒரு லட்சம் விரைவான பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

2 - கண்டறிதல்(Tracing)

பரிசோதனை செய்த பிறகு செய்ய வேண்டியது கண்டறிதல். பாதிக்கப்பட்ட நபருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள். எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்று அதன் பாதையைக் கண்டறிய வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களை உடனே தனிமைப்படுத்த வேண்டும். இதற்கு டெல்லி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3 - சிகிச்சை(Treatment)

இதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டவர்களை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். இதற்காக 2,950 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எல்.என்.ஜே.பி, ஜிபி பண்ட், ராஜிவ் காந்தி மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸிற்கு பிரத்யேக சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிகிச்சைக்காக 12 ஆயிரம் ஓட்டல் அறைகளும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. நோயால் அதிகம் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளிலும், லேசான அறிகுறிகள் தென்படுவோர் ஹோட்டல் அறைகளிலும் தங்க வைக்கப்பட உள்ளனர்.

4 - குழு செயல்பாடு(Teamwork)

கொரோனா வைரஸ் பாதிப்பை குழு செயல்பாட்டின் மூலமே தோற்கடிக்க முடியும். நோயாளிகளை கவனித்தல், தொற்றை பரவ விடாமல் பாதுகாத்தல் போன்ற செயல்களை மருத்துவர்களும், செவிலியர்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இந்த குழு நடவடிக்கை மூலமாக மட்டுமே நோய்ப் பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்படும்.

5 - கண்டறிதல் & கண்காணித்தல்(Tracking & Monitoring)

எந்தெந்த பகுதிகள் கட்டுப்பாடுடன் இருக்கின்றன. எந்த இடத்தில் கட்டுப்பாட்டை மீறி வைரஸ் தொற்று ஏற்படுகிறது என்பதை கண்காணித்து, அந்த பகுதிகளை தனிமைப்படுத்தி பாதுகாத்தல் சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும். இந்த கண்காணிப்பு வேலைகளில் போலீசார் முழுவீச்சில் செயல்படுவர்.

இந்த 5 செயல்முறைகள் மூலம் கொரோனா என்னும் வைரசை சமூகத் தொற்று என்னும் நிலைக்கு கொண்டு செல்ல விடாமல் ஆரம்பத்திலேயே முடக்கி விட முடியும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.