'தேர்தலில் மக்கள் வைத்த ட்விஸ்ட்'... 'அந்த மக்களுக்கே இன்ப அதிர்ச்சி கொடுத்த 'திமுக பிரமுகர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேர்தலில் தான் தோல்வி அடைந்த போதிலும், கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார் திமுக பிரமுகர் ஒருவர்.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துபெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இந்நிலையில் அதே பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் போட்டியிட்டார். இன்னும் சிலரும் போட்டியிட்டதால் அந்த பதவிக்கு கடும் போட்டி நிலவியது.
இதனிடையே தேர்தல் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் வெற்றிபெற்றார். முத்துபெருமாள் 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையிலும், சற்றும் துவண்டு விடாத அவர், மறுநாளே கிராமங்களுக்கு சென்று தனக்கு வாக்களி்த்த வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். அதோடு வெற்றி தோல்வி என்பது பிரச்சனை இல்லை, உங்களது அன்பு எப்போதும் வேண்டும் எனவே உங்களுக்கு பிரியாணி விருந்து வைப்பேன் என உறுதி கூறினார்.
அதன்படி பெரியப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பெரியாண்டிக்குழி கிராமத்தில் நேற்று முன்தினம் ஊர் விருந்து என்ற பெயரில் கிராம மக்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வைத்தார். இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் வயிறார சாப்பிட்டனர். இதுகுறித்து பேசிய முத்துபெருமாள், '25-வது வார்டுக்குட்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரியாணி விருந்து வைப்பேன்' என கூறினார்.
இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதன் பிறகு வாக்காளர்களை மறந்து விடும் தருணத்தில், தான் தோல்வி அடைந்த போதிலும் தி.மு.க. பிரமுகர் கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்த சம்பவம் அந்த கிராம மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
