‘நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு’... ‘அட்வைஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்’... ‘கண்டனம் தெரிவித்த அமைச்சர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 21, 2020 03:36 PM

நடிகர் ரஜினிகாந்தின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பிதிலளித்துள்ள மு.க.ஸ்டாலின் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

DMK Leader MK Stalin reacts on Rajinikanth\'s Issue

துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து திமுகவினர் எந்தக் கருத்தையும் கூறாமல் இருந்தனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தந்தை பெரியார் பற்றிப் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். அவரிடம் நான் விரும்பிக் கேட்டுக் கொள்வது, 95 ஆண்டு காலம் தமிழினத்துக்காகவே போராடி வாழ்ந்து மறைந்த தந்தை பெரியார் பற்றிப் பேசும் போது, நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து பேசப் வேண்டும் என்பதைத்தான்’ எனத் தெரிவித்தார்.

இதேபோல், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘ஏற்கெனவே காவிரி விவாகரம் தொடர்பாக பேசிவிட்டு, பின்பு உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்பு கேட்டார். அதேபோல் பெரியார் குறித்து பேசியதற்காகவும் உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்பு கேட்பார். ரஜினிகாந்த் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை’ என்றார்.

இதற்கிடையில், ‘மறக்க வேண்டிய சம்பவம் எனக் கூறி மீண்டும் அதை ஞாபகப்படுத்தியுள்ளார் ரஜினி’ என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ‘பழைய நிகழ்வுகளை பற்றி பேசுவதால் ரஜினிக்கு PHD பட்டமா கொடுக்கப் போகிறார்கள்‘ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ‘அனைவரும் மதிக்கும் பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, துக்ளக் இதழின் 50-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், ‘கடந்த 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில், ராமர் மற்றும் சீதையின் ஆடையில்லா படங்கள், செருப்பு மாலையுடன் இடம்பெற்றது. அந்த சம்பவத்தை வேறு பத்திரிக்கைகள் எதுவும் பிரசுரிக்காத நிலையில் துணிச்சலாக சோ, துக்ளக் பத்திரிகையில் பிரசுரித்தார்.

இதனால் அப்போது ஆட்சியிலிருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, இந்தச் செயலால் அரண்டுபோனது. துக்ளக் இதழின் பிரதிகளை மாநில அரசு பறிமுதல் செய்தது. அப்படி இருந்தும் மீண்டும் இதழ்களை சோ அச்சடித்து விநியோகம் செய்தபோது, பிளாக்கில் அதிக விலைக்கு விற்றது’ என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்பு எதுவும் கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் அதிரடியாக கூறியிருந்தார்.