"தாயின் அன்பு முன்னாலயும் தெய்வங்கள் தோற்றுப் போகும்யா".. மகள் செய்த நெகிழ்ச்சி காரியம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அருகே தன்னை கஷ்டப்பட்டு பாத்திரம் கழுவி காப்பாற்றிய தாய்க்கு நன்றி கடனாக கோயில் கட்டிய மகளின் செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தாய்க்கு கோயில் கட்டிய லட்சுமி கூறியதாவது, "என் தாயை விட்டுப் பிரிய மனமில்லாமல் தான் திருமணம் கூட செய்யாமல் வாழ்ந்து வருகிறேன். எனக்கு, என் தாய் தான் எனக்கு தெய்வம்; அதனால் தான் அவருக்கு கோயில் கட்டி பூஜை செய்து வருகிறேன்" என்று கூறினார். இன்றைய சூழலில் அன்பை தொலைத்து பணத்தை தேடும் மனிதர்கள் அதிகம் ஆகிவிட்டனர். பணம் தான் எல்லாமே என்றாலும் தாய்க்கு நிகர் எவரும் இல்லை என்பதே இந்த நிகழ்வு உணர்த்தியிருக்கிறது. அம்மாவை பற்றி சினிமா பாடல்கள் அதிகம் வந்துள்ளன. ஆனால் லட்சுமியின் தியாகத்தை வார்த்தையால் போற்றினாலும் தகாது. யார் இந்த லட்சுமி? எதற்காக தாய்க்கு கோயில் கட்டினார்... அவரது அம்மா யார் என்பதை அறிந்துகொள்வோம்.
யார் இந்த லட்சுமி
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட டிபன்ஸ் காலனி பகுதியில் வசிப்பவர் லட்சுமி (62). இவர் தனது தாய் கன்னியம்மாள் மற்றும் தந்தை ஆறுமுகம் ஆகிய மூவரும் வசித்து வந்துள்ளனர். அதாவது, ஒருங்கிணைந்த வட ஆர்க்காடு மாவட்டத்தில் அப்பொழுது வாழ்ந்து வந்தனர். லட்சுமி சிறு வயதாக இருந்தபோது, அவரது தந்தை ஆறுமுகம் இவரையும், தாய் கன்னியம்மாளையும் விட்டுவிட்டு தனியாக பிரிந்து சென்றுள்ளார். கணவன் செயலால் சிறு குழந்தையுடன் தவித்து போன கன்னியம்மாள், லட்சுமியை கூட்டி கொண்டு வயிற்று பிழைப்புக்காக சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் குடியேறியுள்ளார்.
தன்னையே அர்ப்பணித்த தாய்
குடும்ப வறுமையை போக்குவதற்காக கன்னியம்மாள் அக்கம்பக்கத்தில், உள்ள பல வீடுகளில் பாத்திரம் கழுவி பல கஷ்டங்களுடன் லட்சுமியை படிக்க வைத்தார். இதில் லட்சுமி நன்றாக படித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் ஸ்டெனோகிராபராக பணிபுரிந்து வந்தார். தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தாயை பார்த்துக்கொள்வதற்காக லட்சுமியும் திருமணம் கூட செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், லட்சுமியின் தாய் கன்னியம்மாள், கடந்த 2019ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார்.
தாய்க்கு கோயில்
அம்மாவை இழந்த பிறகு லட்சுமி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், பல இன்னல்களுக்கு ஆளாகி, உடலை வறுத்தி, தன்னை வளர்த்து ஆளாக்கிய தாய்க்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் லட்சுமிக்கு தோன்றியுள்ளது. இதையடுத்து லட்சுமி தனது பணி ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியத்தை வைத்து தனது தாய்க்கு 20 லட்ச ரூபாய் செலவில் கோயில் கட்டியுள்ளார். இந்தக் கோயிலில் தாய் கன்னியம்மாள் சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்து தினமும் தாயின் சிலைக்கு பூஜை செய்து வருகிறார்.
பொதுமக்கள் பெருமிதம்
மேலும் இந்தக் கோயிலில் விநாயகர், நாகதேவதை பாலமுருகன் வைஷ்ணவி பிராமி மற்றும் நவக்கிரகங்கள் சிலையையும் வைத்து வழிபடுகிறார். லட்சுமி கட்டிய கோயிலுக்கு அப்பகுதி மக்களும் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தன்னை வளர்த்து ஆளாக்கிய கன்னியம்மாளுக்கு மகள் தாய்க்கு ஆற்றும் உதவியை நினைத்து அப்பகுதி மக்கள் பெருமிதம் கொள்கின்றனர். இதுகுறித்த செய்தி வெளியாகி பலரது கவனத்தையும் மட்டுமல்ல தாய் மீதான மதிப்பை உணரத்தொடங்கியுள்ளனர் மக்கள்.

மற்ற செய்திகள்
