தேர்தல் முடிந்ததும் செம்ம அறிவிப்பு காத்திருக்கு.. முதல்வர் ஸ்டாலினே சொன்ன விஷயம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நேற்று சென்னையில் புத்தகக் கண்காட்சியை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் துவங்கி வைத்தார். அப்போது விழாவில் பேசிய அவர் தேர்தல் முடிந்ததும் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட இருப்பதாக அவர் கூறியதைக் கேட்டு அங்கு கூடியிருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பினார்கள்.

புத்தகக் கண்காட்சி
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான ‘பபாசி’ சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. வரும் மார்ச் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ள புத்தக காட்சியில், 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45 ஆவது புத்தக காட்சியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை துவங்கி வைத்தார்.
விரைவில் நல்ல அறிவிப்பு
விழாவை துவங்கி வைத்து ஸ்டாலின் பேசுகையில்,"2007-ஆம் ஆண்டு இந்தப் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க கலைஞர் வருகை தந்த நேரத்தில், அப்போது நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் பிரபஞ்சன் 'முதலமைச்சர் வந்தால் அறிவிப்பு இல்லாமல் இருக்காது" எனக்குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
ஒரு கோடி ரூபாய்
எழுத்தாளர் பிரபஞ்சனுடைய கருத்தை ஏற்கும் வகையில் கலைஞர் செயல்பட்ட விதம் குறித்துப் பேசிய முதல்வர்,"'ஒரு எழுத்தாளன் சொன்னது வீண் போக விட்டுவிடக் கூடாது' என்று அதைக் குறிப்பிட்டுப் பேசிய கலைஞர் தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை பபாசி அமைப்புக்கு வழங்கி இந்த விழாவில் பொற்கிழி வழங்கக்கூடிய நிலைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்" என்றார்.
தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற இடைத் தேர்தல் நடைபெற இருப்பதால் சில சில அறிவிப்புகளை தற்போது வெளியிட முடியவில்லை என எனக் குறிப்பிட்ட ஸ்டாலின் இதுபற்றி பேசுகையில்," இன்று முதலமைச்சராக வந்துள்ள நானும் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தான் ஆசையோடு வந்தேன். ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், அதனுடைய விதிமுறைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். எனவே, அந்த அடிப்படையில் இப்போது அறிவிக்க முடியாது. இவ்வளவு நாள் பொறுத்திருந்தீர்கள், இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள். விரைவில் நல்ல செய்தியை நான் அறிவிப்பேன்" என்றார். இதனால் அங்கிருந்த அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.
வாசிப்புப் பழக்கம்
புத்தக வாசிப்பு குறித்து மேடையில் பேசிய முதல்வர்,"இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடக்கட்டும். வாசிப்புப் பழக்கம். விரிவடையட்டும்! நானிலமெங்கும் அறிவுத்தீ பரவட்டும். கொரோனா காலம் என்பதால் அரசின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து இந்தப் புத்தகக் கண்காட்சி சிறப்புடன் இயங்கட்டும் என்று மனதார, நெஞ்சார தமிழக அரசின் சார்பிலும், என்னுடைய சார்பிலும் வாழ்த்தி விடைபெறுகிறேன்."என்றார்.

மற்ற செய்திகள்
