‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனல் மீது பறந்த புகார்கள்.. வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு!.. நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனல் மீது, இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக பாஜக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தப் புகாரில், அண்மையில் கறுப்பர் கூட்டம் என்கிற பெயரில் யூடியூப் சேனலில் முருகக்கடவுள் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக பேசி, இந்து மதத்தையும் அசிங்கப்படுத்துமாறான வீடியோ வெளியிடப்பட்டதாகவும், தொடர்ந்து இந்துமத தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்,இதிகாசங்கள், புராணங்கள் உள்ளிட்டவற்றை இழிவுபடுத்தி பதிவு வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கறுப்பர் கூட்டம் என்கிற யூடியூப் சேனல், அதன் வெளியிட்டடாளர் சுரேந்திர நடராஜன் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை வேண்டும் என பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அத்துடன் அந்த சேனலை தடை செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா, வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் ஆகியோர் இம்மனுவை காவல் ஆணையரிடம் அளித்தனர். இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 249/2020 U/S 153,153(A)(1)(a),295(p),505(1)(b),505(2) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்
