'வீட்டை விட்டு' வெளியே வந்தா 'காய்ச்சல் வந்துரும்...' 'வீட்டிற்குள்ளேயே' இருந்தா 'காய்ச்சுற எண்ணம் வருமா?...' 'ஐ.டி. ஊழியர்களை' அலேக்காக தூக்கிய 'போலீஸ்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Apr 21, 2020 05:16 PM

சென்னை நீலாக்கரை அருகே யூடியூப் வீடியோ பார்த்து வீட்டில் மதுபானம் தயாரித்த ஐடி நிறுவன ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

IT staffs arrested for brewing alcohol at home watching YouTube

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், கடந்த மாதம் 25ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், குடிமகன்கள் மதுபானம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதை பயன்படுத்தி ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நீலாங்கரை பகுதியில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே மதுபானம் தயாரித்த ஐடி நிறுவன ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சின்ன நீலாங்கரை, சிங்கார வேலன் தெருவை சேர்ந்த ராகுல், வினோத் ராஜ் ஆகிய இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். தற்போது, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், வெகு நாட்களாக குடிக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் யூடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே மதுபானம் தயாரிக்க முடிவு செய்தனர். அதன்படி மதுபானத்தைத் தயாரித்து வீட்டின் பின்புறம் நிலத்தின் அடியில் புதைத்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், நீலாங்கரை போலீசாருக்கு மதுபானம் தயாரிக்கும் இளைஞர்கள் குறித்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்ஐ பிரதீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, இவர்கள் மதுபானம் தயாரித்து வீட்டின் பின்புறம் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் தயாரித்த மதுபானத்தை பறிமுதல் செய்து, கீழே ஊற்றி அழித்தனர்.